சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே குறிச்சியிலுள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் இன்று(செவ்வாய்கிழமை)மஹாலய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பண பூஜை நடத்த விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மானாமதுரையிலிருந்து தெ.புதுக்கோட்டை வழியாக பரமக்குடி செல்லும் சாலையில் உள்ள குறிச்சி காசி விஸ்வநாதர் கோயில் காசியில் உள்ள வ்ஸ்வநாதர் சுவாமி கோயில் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மூலவர் லிங்க வடிவிலான காசி விஸ்வநாதர் சிலை காசியில் வடிவமைக்கப்பட்டு கொண்டுவரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
மேலும் பக்தர்கள் காசியில் உள்ளதைப்போன்று கங்கை தீர்த்தமிட்டு சுவாமியை தரிசனம் செய்யலாம். இன்று (செவ்வாய்கிழமை)மஹாலய அமாவாசை தினம் என்பதால் குறிச்சி காசி விஸ்வநாதர் சுவாமி கோயிலில் முன்னோர்களுக்கு தர்ப்பண பூஜை நடத்த விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தர்ப்பண பூஜை நடத்த வருபவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் எள், அகத்திக்கீரை, வாழைப்பழம் உள்ளிட்ட பொருள்கள் இலவசமாக வழங்கப்படும். இக் கோயிலில் தர்ப்பண பூஜை நடத்தினால் காசியில் தர்ப்பணம் செய்த பலன் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
காலை 8 மணி முதல் பகல் 11 மணி வரை தர்ப்பண பூஜை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயில் டிரஸ்டி எஸ்.பி தேவர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.