தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை பாதுகாப்பு காரணங்களுக்காக வேறு மாநிலத்தில் அளிக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம். லோதாவிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்கள் என். ராஜாராமன், ஆர். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம். லோதாவை நேரில் சந்தித்து அளித்துள்ள மனு விவரம்:
"தமிழக முதல்வர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வரும் 27-ஆம் தேதி அளிக்கப்படவுள்ளது. இந்த வழக்கில் ஜெ.ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான தீர்ப்பு பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரம் சிறை வளாக நீதிமன்றம் அல்லது 37-ஆவது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் அளிக்கப்பட உள்ளது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முதல் நபரான ஜெ. ஜெயலலிதா, தமிழக முதல்வராக உள்ளார். அவரது உயிருக்கு ஏற்கெனவே அச்சுறுத்தல் உள்ளது. இதனால், அவருக்கு "இசட் பிளஸ்' பிரிவின்கீழ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், காவிரி நதி நீர்ப் பிரச்னையில் அவரது முயற்சிகள் வெற்றி பெற்றுள்ளதால் அவர் மீது கர்நாடக மாநில மக்கள் மத்தியில் அதிருப்தியும், வெறுப்பும் உள்ளது.
இந்த நிலையில், தீர்ப்பு அளிக்கப்படும் நாளான செப்டம்பர் 27-ஆம் தேதி பெங்களூரு நீதிமன்ற வளாகத்தில் ஜெயலலிதா ஆஜராவதற்கு கன்னட சலுவளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் மற்றும் அம்மாநிலத்தைச் சேர்ந்த சில மொழிவாரி பிராந்தியக் கட்சிகளிடம் இருந்து வெளிப்படையாகவே அச்சுறுத்தல்கள் காணப்படுகின்றன.
பரப்பன அக்ரஹார சிறை வளாகங்களில் நீதிமன்ற வளாகத்தில் போதுமான பாதுகாப்பு வசதிகள் கிடையாது. இந்த நிலையில், தமிழகத்தில் இருந்து பெரும்பான்மை அதிமுகவினரும் தீர்ப்பு வெளியாகும் நாளில் பெங்களூருவில் குழுமுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை ராணுவத்தாலும் அச்சுறுத்தல் உள்ளது. எனவே, முதல்வர் ஜெயலலிதாவின் விலைமதிக்க முடியாத உயிர் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்த வழக்கின் தீர்ப்பை கர்நாடகம் தவிர்த்த வேறு பிற மாநிலங்களில் அளிக்க உத்தரவிட பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதிக்கு உத்தரவிட வேண்டும்' என்று மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதை பெற்றுக்கொண்ட தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா, மனுவை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உச்ச நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளர் ரவீந்திரா மைதானிக்குப் பரிந்துரை செய்ததாகத் தெரிகிறது.