வரதட்சிணை கொடுமையால் இளம் பெண் தீக்குளித்து உயிரிழந்த வழக்கில், அவரது கணவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் பேகம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அ.கனவாய் சேட்(29). இவருக்கும், பழனி பகுதியைச் சேர்ந்த மு.ரோஜாபேகம்(20) என்பவருக்கும், கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இருவரும் பேகம்பூர் பகுதியில் வசித்து வந்த நிலையில், 2007 ஜனவரி 31ஆம் தேதி காலை, தீக்காயங்களுடன் ரோஜாபேகம் உயிரிழந்து கிடந்தார்.
இதுகுறித்து திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீஸார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், கணவரின் வரதட்சிணை கொடுமை தாங்க முடியாமல் ரோஜாபேகம் தற்கொலை செய்துள்ளார் என்பது கண்டறியப்பட்டது.
இதனை அடுத்து, கனவாய் சேட் மீது வரதட்சிணை கொடுமை வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவர் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு திண்டுக்கல் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், மாவட்ட நீதிபதி(மகளிர் நீதிமன்றம்) பிருந்தா கேசவச்சாரி திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கினார்.
கனவாய் சேட் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.