69% சதவீத இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே, சாதிவாரி கணக்கெடுப்பு தான் தீர்வு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழகத்தில் எந்த அடிப்படையில் 69% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது என்பது பற்றி 2 வாரங்களில் விளக்கமளிக்க ஆணையிட்டுள்ளது.
மண்டல் ஆணையத்தின் பரிந்துரைப்படி மத்திய அரசு வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க வி.பி.சிங் தலைமையிலான மத்திய அரசு 1990ஆம் ஆண்டில் ஆணையிட்டது. அதை எதிர்த்து தொடரப்பட்ட இந்திரா சகானி வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அசாதாரண சூழல் நிலவாத மாநிலங்களில் இட ஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட்டிற்கும் கூடுதலாக இருக்கக்கூடாது என்று தீர்ப்பளித்தது. அப்போதே தமிழகத்தின் 69% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. எனினும், தமிழகத்தின் 69% இட ஒதுக்கீடு அரசியலமைப்பு சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டிருந்ததால் அரசியல் சட்டப் பாதுகாப்பு பெற்றிருந்தது. ஆனால், அரசியல் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள சட்டங்களும் நீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்டவையே என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு தமிழக இட ஒதுக்கீட்டுச் சட்டமும் நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்தப்படும் நிலை உருவானது. இத்தகைய சூழலில் கடந்த 13.07.2010 அன்று 69% இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்பு சட்ட அமர்வு, தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பளித்தது. எனினும், ஓராண்டுக்குள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதனடிப்படையில் இடஒதுக்கீட்டை மறுநிர்ணயம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கும், பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருந்தது.
அப்போதே உச்சநீதிமன்றத்தின் ஆணையை மதித்து தமிழகத்தில் சாதி வாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி அதனடிப்படையில் இட ஒதுக்கீட்டை நிர்ணயிக்கும்படி முந்தைய திமுக ஆட்சியிலும், தற்போதைய அதிமுக ஆட்சியிலும் வலியுறுத்தினேன்.
ஆனால் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர் நீதிபதி ஜனார்த்தனத்தின் யோசனையை நம்பி சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த முடியாது என்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மறுத்தார். தற்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவோ பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் ஜனார்த்தனம் அளித்த நிரூபிக்க முடியாத புள்ளிவிவரங்களை ஏற்றுக் கொண்டு தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு தொடரும் என 2011 ஆம் ஆண்டு ஆணையிட்டார். உச்சநீதிமன்றத்தின் அறிவுரைக்கு எதிரான இந்த தவறான அணுகுமுறை காரணமாகவே இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
இந்திரா சகானி வழக்கில் இட ஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட்டிற்கும் மிகக் கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியிருந்தாலும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், அதை அசாதாரணமான சூழலாக கருதி இட ஒதுக்கீட்டு அளவை அதிகரிக்கலாம் என உணர்த்தியுள்ளது. தமிழகத்தில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினரின் எண்ணிக்கை 69% விழுக்காட்டிற்கும் கூடுதலாக உள்ளது என்பது உண்மை. ஆனால், அதை நிரூபிப்பதற்கான புள்ளி விவரங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தால் மட்டுமே தமிழ்நாட்டில் 69% விழுக்காடு இடஒதுக்கீட்டு ரத்து செய்யப்படாமல் தடுக்கமுடியும்.
இதேபோன்ற இன்னொரு வழக்கு 2013 ஏப்ரல் மாதம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, தமிழக மக்கள் தொகையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை 68%, தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினரின் எண்ணிக்கை 19%, ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டுப் பிரிவினரின் எண்ணிக்கை 87% என்று தமிழக அரசின் சார்பில் வாதிடப்பட்டது. ஆனால், ஆதாரமில்லாத இந்த தகவல்களை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. இந்த வழக்கிலும் இதேபோன்ற புள்ளி விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டாலும் அது ஏற்கப்படுமா? என்பது தெரியவில்லை.
தமிழ்நாட்டில் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி இட ஒதுக்கீட்டுப் பிரிவினரின் அளவை சாதி வாரியாக ஆதாரப்பூர்வமாக உறுதி செய்யும்போது தான் அதை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்ளும். இதை செய்து இட ஒதுக்கீட்டை பாதுகாப்பதை விடுத்து, தகுதியில்லாத அறிவுரைகளை நம்பி தமிழக அரசு நிலைமையை மோசமாக்கிக் கொண்டிருக்கிறது. 69% இட ஒதுக்கீடு என்பது தமிழக மக்களின் உரிமை ஆகும். தவறான செயல்பாடுகளால் அதை பறிகொடுத்து விடக் கூடாது. ஒருவேளை 69% இடஒதுக்கீட்டுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமானால் அதற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவும், பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தலைவர் ஜனார்த்தனமும் தான் பொறுப்பேற்கவேண்டும்.
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சமூக நீதியில் உண்மையான அக்கறை இருந்தால், தவறான வழிகாட்டுதல்களை பின்பற்றுவதை விடுத்து, உச்சநீதிமன்ற அறிவுரையை மதித்து தமிழகத்தில் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும்; அதன் அடிப்படையில் அனைத்து சமுதாய மக்களுக்கும் உரிய வாய்ப்பு கிடைக்கும் வகையில் 69% இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.