நீலகிரி மாவட்டத்திலுள்ள ஒரே பொதுத் துறை நிறுவனமும், தெற்காசியாவில் அமைக்கப்பட்ட ஒரே ஃபிலிம் தொழிற்சாலையுமான ஹெச்.பி.எஃப். தொழிற்சாலையை விரைவில் மூடுவதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்த அறிவிப்பை, மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் வெளியிடுவதென தீர்மானிக்கப்பட்டுள்ள சூழலில், வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ள மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இத் தொழிற்சாலை தொடர்பாக இறுதி முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்படுமென தகவல்கள் வெளியாகியுள்ளன.
உதகையில் அமைந்துள்ள இந்துஸ்தான் ஃபோட்டோ ஃபிலிம் தொழிற்சாலை நலிவடைந்து விட்டதாலும், இத் தொழிற்சாலையில் தற்போது உற்பத்தி நடைபெறாததாலும், இத் தொழிற்சாலையில் பணியாற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவு ஊழியர்களின் எதிர்காலம் குறித்து மத்திய கனரக தொழில் துறைக்கு அனுப்பப்பட்ட மனுவின் பேரில், மத்திய கனரகத் தொழில் துறை அமைச்சக துணைச் செயலர் மஞ்சித்குமார், சென்னையிலுள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது:
இந்துஸ்தான் ஃபோட்டோ ஃபிலிம் தொழிற்சாலை 1960-இல் உருவாக்கப்பட்டது. இத் தொழிற்சாலை 1995-இல் பெரும் நிதி நெருக்கடியைச் சந்தித்ததால், 1996-ஆம் ஆண்டு தொழிற்சாலைகளின் மறுசீரமைப்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், மறுசீரமைப்பு வாரியம் எடுத்த முயற்சிகளிலும், இத் தொழிற்சாலையின் பங்குதாரராக எவரும் செயல்பட முன்வராததாலும் இத் தொழிற்சாலையின் எதிர்காலம் குறித்த கோப்பு 2002-இல் திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது.
இந் நிலையில், 2003-இல் இத் தொழிற்சாலையை மூடிவிடுவதென தீர்மானிக்கப்பட்டது. அதன் பின்னர் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இவ்வழக்கின் இறுதி விசாரணை கடந்த மாதம் 24-ஆம் தேதியிலிருந்து பலமுறை ஒத்திவைக்கப்பட்டதால் இறுதி முடிவெடுப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. இத் தொழிற்சாலைக்கு பொதுத் துறை வங்கிகள் வழங்கியுள்ள கடன் தொகை மற்றும் அதற்கான வட்டி தொடர்பான பிரச்னையும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
2010-இல் பொதுத் துறை நிறுவனங்களுக்கான மறுசீரமைப்பு வாரியத்தின் பரிந்துரைகளின்படி, இத் தொழிற்சாலைக்கு கடன் வழங்கியவர்களுக்கு ஒருமுறை வழங்கக்கூடிய ரொக்கமாக ரூ.272 கோடி வழங்குவதெனவும், இத் தொழிற்சாலை வளாகத்தில் மாற்றுத் திட்டங்களாக கொய்மலர் சாகுபடி உள்ளிட்டவற்றைத் தொடங்குவதெனவும், எக்ஸ்ரே பேப்பரின் அளவை 8.2 கிராம் எடையிலிருந்து 5.5 கிராம் எடையாக குறைப்பதெனவும், வருமானம் ஈட்டக்கூடிய வேறு பல நடவடிக்கைகளுக்கு இத் தொழிற்சாலையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இச் சூழலில் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்ற பொதுத் துறை நிறுவனங்களுக்கான மறுசீரமைப்பு வாரியக் கூட்டத்தில், இத் தொழிற்சாலையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் விருப்ப ஓய்வு வழங்குவதெனவும், அதற்காக 2007-ஆம் ஆண்டின் ஊதிய மறுசீரமைப்பின்படி, இத் தொகை வழங்கப்படுமெனவும், இதற்கான இறுதி அறிவிப்பை நீதிமன்றம் வெளியிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அனைத்து ஆவணங்களும் கடந்த 14-ஆம் தேதி மத்திய கனரகத் தொழில் துறை அமைச்சகத்தில் இருந்து, அமைச்சரவை மற்றும் பிரதமர் அலுவலகத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இச் சூழலில், மக்களவைத் தேர்தலுக்கு முந்தைய கடைசி மத்திய அமைச்சரவைக் கூட்டம் வரும் 27-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வரும் மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே ஹெச்.பி.எஃப். தொழிற்சாலையின் நிலை குறித்த இறுதி முடிவெடுக்கப்பட்டு விடுமென்பதால், இத் தொழிற்சாலை தனது இறுதி விளிம்பில் உள்ளதாகவே கூறப்படுகிறது.