Enable Javscript for better performance
முன்னாள் அமைச்சர் பூவராகவன் மறைவு: ராமதாஸ் இரங்கல்- Dinamani

சுடச்சுட

    
    ramadas

    முன்னாள் அமைச்சர் பூவராகவன் மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

    காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜி. பூவராகவன் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும், தாங்க முடியாத துயரமும் அடைந்தேன்.

    காங்கிரஸ் இயக்கத்தின் மீது மிகுந்த பற்று கொண்டிருந்த இவர் தமது இளம் வயதிலேயே 1962 ஆம் ஆண்டில் விருத்தாசலம் தொகுதியிலிருந்து சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதுமட்டுமின்றி காமராஜர் தலைமையிலான அமைச்சரவையில் செய்தி -விளம்பரத்துறை அமைச்சராகவும் திறம்பட பணியாற்றியவர். மாநில சட்டப்பேரவைக்கு மூன்று முறையும், நாடாளுமன்ற மக்களவைக்கு இரு முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பான முறையில் மக்கள் பணியாற்றியவர்.

    காமராஜரின் சீரிய தொண்டரான பூவராகவன் அவரது நம்பிக்கைக்குரிய தளபதியாக திகழ்ந்தவர். எனக்கும் நல்ல நண்பராக இருந்தவர். ஏழைகள் நலனிலும், தமிழகத்தின் முன்னேற்றத்திலும்  மிகுந்த அக்கறை கொண்டிருந்தவர். எளிமையின் அடையாளமாக திகழ்ந்தவர். அமைச்சர்கள் எப்படி பணியாற்ற வேண்டும் என்பதற்கு உதாரணமாக விளங்கியவர்.

    பூவராகவனின் மறைவு காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai