Enable Javscript for better performance
திராவிட பஞ்சாலை தேர்தல் விவகாரம்:நீதிக்குக் கிடைத்த வெற்றி: வைகோ - Dinamani

சுடச்சுட

    

    திராவிட பஞ்சாலை தேர்தல் விவகாரம்:நீதிக்குக் கிடைத்த வெற்றி: வைகோ

    Published on : 27th March 2014 06:10 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    vaiko2

    கோவை-பெரியார் மாவட்டத் திராவிடப் பஞ்சாலைத் தொழிலாளர் முன்னேற்றச் சங்க பொதுச்செயலாளராக திருப்பூர் சு. துரைசாமி தொடராலாம் என்ற உயர்நீதிமன்றதின் உத்தரவு நீதிக்குக் கிடைத்த வெற்றி, என்று வைகோ தெரிவித்துள்ளார். இத குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    அறிஞர் அண்ணா அவர்களின் அறிவுறுத்தலின்படி தொடங்கப்பட்டது கோவை-பெரியார் மாவட்டத் திராவிடப் பஞ்சாலைத் தொழிலாளர் முன்னேற்றச் சங்கம். அதன் பொதுச் செயலாளராக, 1960-ஆம் ஆண்டு முதல் திருப்பூர் சு. துரைசாமி அவர்கள் செயல்பட்டு வருகிறார். 1967-ஆம் ஆண்டு முதல் 1976-ஆம் ஆண்டு வரை திருப்பூர் சட்டமன்ற உறுப்பினராகவும் பணி ஆற்றி இருக்கின்றார்.

      1997-ஆம் ஆண்டில், தி.மு.கழகத்தைச் சார்ந்தவர்கள், வேண்டுமென்றே இடையூறு செய்கிற வகையில், அப்பொழுது அவர்களுக்கு இருந்த ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஒரு போலித் தேர்தலை நடத்தி, அதில் தாங்கள் வெற்றி பெற்றதாகக் கூறி நீதிமன்றத்தில் ஓர் இடைக்கால உத்தரவைப் பெற்று, 1997-ஆம் ஆண்டு மே மாதம் 2-ஆம் தேதி தொழிற்சங்கக் கட்டடத்தைப் பூட்டினார்கள்.  அதை எதிர்த்து சு. துரைசாமி அவர்கள் வழக்கு தொடர்ந்தார்.

    1997-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் திரு. ஏ. ராமன் அவர்கள், காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆளுங்கட்சியினருக்கு அடிபணிந்து நடப்பதைக் கண்டித்ததுடன், உடனடியாக சங்கத்தின் சாவியை சு. துரைசாமி அவர்கள் வசம் ஒப்படைக்கும்படி உத்தரவு பிறப்பித்தார். அவரது பொறுப்பிலேயே தொழிற்சங்கக் கட்டடம் செயல்பட்டு வந்தது.

     2010-ஆம் ஆண்டு, தி.மு.கழகம் மீண்டும் ஆட்சியில் இருந்தபோது, 24.03.2010-இல் ஒரு தொழிற்சங்கத் தேர்தல் நடந்ததாகவும், அதில் தி.மு.கழகத்தைச் சார்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், பொய்யான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, இடைக்கால உத்தரவு பெற்று, காவல்துறையின் துணையுடன், 27.03.2010 அன்று மாலை தொழிற்சங்கத்திற்குச் சென்ற துரைசாமி அவர்களையும் தோழர்களையும் தடுத்து நிறுத்தினார்கள். 

    இதை எதிர்த்து, கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் சு.துரைசாமி வழக்குத் தொடுத்தார்.  இவ்வழக்கிலும், கோவை மாவட்ட நீதிபதி அவர்கள், துரைசாமி தலைமையிலான சங்கத்திற்குத்தான் கட்டடத்தின் உரிமை உள்ளது என்றும், 24.03.2010-இல் நடைபெற்றதாகக் கூறப்படும் தேர்தல் போலியானது-செல்லாது என்றும் 30.04.2010-இல் தீர்ப்பு அளித்தார்.

    நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, மாவட்டக் கூடுதல் நீதிபதி அவர்கள் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்கள்.  நீதியரசர் சித்ரா வெங்கட்ராமன் அவர்கள், 30.08.2010-இல் இரு தரப்பினரும் ஒத்துழைத்து, வழக்கை 6 மாத காலத்திற்குள் முடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்கள். தி.மு.கழகத் தரப்பினர் வழக்கு நடந்தால் தங்களுக்கு வெற்றி கிடைக்காது என்பதால்,   தொடர்ந்து 4 ஆண்டுகளாக வாய்தா வாங்குவதிலும், மேல் முறையீடு செய்வதிலும் காலம் கடத்தினார்கள். 

    உயர் நீதிமன்றத்தில் மூன்று முறை அவர்கள் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்கள். அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.  இவ்வளவு காலதாமதத்திற்குப் பின்னர், 10.02.2014 அன்று மூன்று வாரத்திற்குள் வழக்கு நடத்தி முடிக்கப்பட்டுத் தீர்ப்பு வழங்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் அவர்கள் உத்தரவு பிறப்பித்தார்கள்.  அதிலும் காலதாமதம் செய்தனர்.

     இறுதியாக வேறு வழியில்லாமல் போக 17.03.2014 அன்று இரண்டு தரப்பு வாதங்கள் நடைபெற்றன.  அதன் அடிப்படையில், 25.03.2014-இல் நீதிபதி அவர்கள் வழங்கிய தீர்ப்பில், பொதுச்செயலாளர் திருப்பூர் சு. துரைசாமி, தலைவர் மற்றும் பொருளாளர் ஆகியோர் தொடர்ந்து செயல்பட அனுமதித்தும், அவர்களது பொறுப்பில் தொழிற்சங்கத்தையும், சொத்துகளையும் ஒப்படைத்தும், தி.மு.க.வினர் இடையூறு செய்யக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்து உள்ளார். 

    தீர்ப்பு விவரம்:   O.S. No. 228 / 2010  பொதுத் தீர்ப்புரை அவை அறிய பகரப்பட்டது.  மு.உ.வ. எண். 228 / 2010-இல் கீழ்க்கண்டவாறு தீர்ப்பும் தீர்ப்பாணையும் பிறப்பித்து தீர்ப்பு அளிக்கப்படுகிறது.

     1. சாட்டுதலுக்குரிய 24.03.2010 தேதியில் நடந்த தேர்தலில் 1 முதல் 9 எதிர்வாதிகள், முதலாம் வாதி தொழிற்சங்கத்தின் அலுவலக நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கூறுவதை, அதிகார வரம்பற்றதும் (Ultra Vires) சட்ட முரணானதும், வாதிகளைக் கட்டுப்படுத்தாததும் ஆகும் என விளம்புகை செய்யப்படுகிறது.

    2. எதிர்வாதிகள், தங்களை முதலாம் வாதி தொழிற்சங்கத்தின் அலுவலக நிர்வாகிகள் என அறிவித்துக் கொண்டு செயல்படக் கூடாது என எதிர்வாதிகளுக்கு எதிராக நிரந்தர உறுத்துக்கட்டளை உத்தரவு வழங்கி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.

    3. 2-ஆம் வாதி சு. துரைசாமி, முதலாம் வாதி தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளராக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர் என விளம்புகை செய்து, அவ்வாறே முதலாம் வாதி தொழிற்சங்கத்திற்குப் புதிதாக தேர்தல் நடைபெறும்வரை பொதுச் செயலாளராகப் பதவி வகித்து வர உரிமை உடையவர் என்றும், அதன் தொடர்ச்சியாகப் பொதுச் செயலாளர் என்ற முறையில் 2-ஆம் வாதி சு. துரைசாமி வழக்கு சொத்தில் செயல்படுவதையும், முதலாம் வாதி கிளைச் சங்கத்தில் செயல்படுவதையும் எதிர்வாதிகள் தடுக்கக் கூடாது என எதிர்வாதிக்கு எதிராக நிரந்தர உறுத்துக்கட்டளை உத்தரவு வழங்கி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.

    4. 3-ஆம் வாதி, முதலாம் வாதி தொழிற்சங்கத்திற்கு முறையாகத் தேர்ந்து எடுக்கப்பட்ட தலைவர் என்றும், தலைவர் என்ற முறையில் முதலாம் வாதி தொழிற்சங்கத்திற்குப் புதிதாகத் தேர்தல் நடைபெறும்வரை அவர் பதவி வகிக்க உரிமை உடையவர் என்று விளம்புகை செய்தும், அதன் தொடர்ச்சியாக 3-ஆம் வாதி முதலாம் வாதி தொழிற்சங்கத்தின் தலைவர் என்ற முறையில் வழக்கு சொத்தில் செயல்படுவதையும், முதலாம் வாதி கிளைச் சங்கத்தில் செயல்படுவதையும் எதிர்வாதி தடுக்கக் கூடாது என எதிர்வாதிகளுக்கு எதிராக நிரந்தர உறுத்துக்கட்டளை உத்தரவு வழங்கி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.

     5. 12-ஆம் வாதி முதலாம் வாதி தொழிற்சங்கத்தில் பொருளாளர் என்றும், பொருளாளர் என்ற முறையில் முதலாம் வாதி தொழிற்சங்கத்தில் புதிதாகத் தேர்தல் நடைபெறும் வரை அவர் பதவி வகிக்க உரிமை உடையவர் என்று விளம்புகை செய்து அதன் தொடர்ச்சியாக 12-ஆம் வாதி முதலாம் வாதி தொழிற்சங்கத்தின் பொருளாளர் என்ற முறையில் வழக்கு சொத்தில் செயல்படுவதையும், முதலாவது வாதி கிளைச் சங்கத்தில் செயல்படுவதையும் எதிர்வாதி தடுக்கக்கூடாது என எதிர்வாதிகளுக்கு எதிராக நிரந்தர உறுத்துக்கட்டளை உத்தரவு வழங்கி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.

     6. 1 முதல் 9 எதிர்வாதிகள் முதலாவது வாதி தொழிற்சங்கத்தின் சொத்துக்களை வேறொரு தொழிற்சங்கத்தில் இணைக்கவோ (To Amalgamate) அல்லது சேர்க்கவோ அல்லது அதுகுறித்து நடவடிக்கைகளில் ஈடுபடவோ (To Deal or Negotiate) கூடாது என எதிர்வாதிகளுக்கு எதிராக நிரந்தர உறுத்துக்கட்டளை உத்தரவு வழங்கி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.

    7. எதிர்வாதிகளோ அல்லது எதிர்வாதிகளின் பொறுப்பில், உடைமை கொண்டுள்ளவர்களோ வழக்குரை பத்தி பத்தில் சொல்லியுள்ள ஆவணங்களை முதலாம் வாதி சங்கத்திடம் இத் தீர்ப்புரைத் தேதியில் இருந்து மூன்று மாத காலத்திற்குள் ஒப்படைக்க வேண்டும். அல்லது மூன்று மாத காலத்திற்குள் இவ்வழக்கில் நியமிக்கப்பட்டுள்ள Official Receiver-ரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று செயல் உறுத்துக்கட்டளை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இந்த இரண்டு வழக்குகளும் இயற் தன்மை ஆகியவற்றைக் கருத்தில்  கொண்டு இரு வழக்குகளிலும் தரப்பினர்கள் அவரவர் செலவுத் தொகைகளை அவரவர்களே ஏற்க வேண்டும்.

    6 மாதத்தில் முடிக்க வேண்டிய வழக்கை 4 ஆண்டுகள் இழுத்தடித்தபோதும், தி.மு.க.வினரின் பல்வேறு தொல்லைகளுக்கும் இடையிலும் காலதாமதத்திற்குப் பின்னரும் நீதி வென்றது. இந்த வெற்றி உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தின் ஒற்றுமைக்கும், உறுதிக்கும், உண்மைக்கும், திருப்பூர் சு. துரைசாமிக்கும் கிடைத்த வெற்றி.

    இவ்வாறு வைகோ வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai