Enable Javscript for better performance
பட்டு நூல், ஜரிகை விலையை குறைக்க குழு அமைக்காதது ஏன்?: காஞ்சிபுரத்தில் விஜயகாந்த் பேச்சு- Dinamani

சுடச்சுட

    

    பட்டு நூல், ஜரிகை விலையை குறைக்க குழு அமைக்காதது ஏன்?: காஞ்சிபுரத்தில் விஜயகாந்த் பேச்சு

    By ராஜவேல்  |   Published on : 27th March 2014 06:36 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    vijayakant01

    காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரான ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவை ஆதரித்துப் பேச, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வியாழக்கிழமை காஞ்சிபுரம் வந்தார்.

    காஞ்சிபுரம் தேரடியில் வேட்பாளர் மல்லை சத்யாவை ஆதரித்து அவர் பேசியபோது, பட்டு நூல், ஜரிகை விலையை குறைக்க குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய ஜெயலலிதா, இது வரை குழு அமைக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

    காஞ்சிபுரம் என்றவுடன் நினைவுக்கு வருவது அண்ணா, கோயில்கள், பட்டுதான். ஒரு காலத்தில் காஞ்சிபுரத்துக்கு சென்றால் காலாட்டி, கையாட்டி பிழைக்கலாம் என்பார்கள். பட்டு நெசவுத் தொழில் புகழ் பெற்று இருந்தது. ஆனால் இன்று பட்டு நெசவுத் தொழில் நசிந்துவிட்டது. பட்டு நூல், ஜரிகை விலையை குறைக்க குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா 3 ஆண்டுகளுக்கு முன்பு கூறினார். ஆனால் அவர் கூறியவது குழு அமைத்தாரா? இது வரை குழு அமைக்காதது ஏன்?

    பாலாறில் கோளாறு:

    பாலாறு தமிழகத்தில் 200 கிலோ மீட்டருக்கு மேல் பாய்கிறது. ஆனால் அதில், ஒரு இடத்தில் கூட தடுப்பணை கட்டவில்லை. அதே நேரம் வெறும் 30, 40 கிலோ மீட்டர் பாயும் ஆந்திரத்தில் 12-க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.

    குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாறில் கோளாறுதான் நிறைந்துள்ளது. மணல் கொள்ளை, கொலை களமாகவும்தான் பாலாறு இப்போது திகழ்கிறது. ரேஷன் கார்டு இருந்தால்தான் மணல் என்று மாவட்ட நிர்வாகம் கூறியது. அ.தி.மு.க.வினரிடம்தான் அதிகமான போலி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. ரூ. 3 ஆயிரத்துக்கு பில் போட்டுவிட்டு ரூ. 35 ஆயிரம், ரூ. 40 ஆயிரத்துக்கு மணலை விற்பனை செய்கின்றனர்.

    ஒரு காலத்தில் ஏரிகள், குளங்கள் நிறைந்த மாவட்டமாக காஞ்சிபுரம் திகழ்ந்தது. அந்தக் காலத்தில் ஆட்சி செய்த அரசர்கள் குளங்களையும், ஏரிகளையும் பாசன வசதிக்காக வெட்டினர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1920-க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. ஆனால் அதில் ஒன்று கூட தூர்வாரி, பாசன வசதிக்கு ஏற்றதாக இப்போது இல்லை. அனைத்தும் புதர்மண்டி, கருவேல மரங்கள் நிறைந்து மோசமான நிலையில் உள்ளன. இதனால் மாவட்டத்தில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறினார் விஜயகாந்த்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai