Enable Javscript for better performance
பறித்த சங்கிலியை விழுங்கிய திருடன் : எக்ஸ்ரே எடுத்து மடக்கியது போலீஸ்- Dinamani

சுடச்சுட

    

    பறித்த சங்கிலியை விழுங்கிய திருடன் : எக்ஸ்ரே எடுத்து மடக்கியது போலீஸ்

    By dn  |   Published on : 27th March 2014 12:58 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    16theft

    அரசு பொது மருத்துவமனையில் பெண்ணிடம் தங்கச் சங்கிலியை  திருடி அதை விழுங்கி தப்பிக்க முயன்ற திருடனை அங்கு பணியிலிருந்த இரண்டு உதவி ஆய்வாளர்கள் பிடித்து எக்ஸ்ரே எடுத்து மடக்கியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

    சென்னை ராஜீவ் காந்தி  அரசு பொது மருத்துவமனையில், தனது தந்தையுடன் தங்கியிருந்த தனலட்சுமி (40) என்பவர் இன்று (27.03.14) விடியற்காலை 02.00 மணியளவில் வார்டு அருகில் படுத்திருந்த போது சுமார் 30 வயது மதிக்கத் தக்க ஒரு நபர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் தங்க சங்கிலியை அறுத்த போது,  அவர் சுதாரித்துக் கொண்டு செயினை பிடித்து கொண்டதால் பாதி சங்கிலியை மட்டும் அறுத்துக் கொண்டு தப்பி ஓடினார். அப்போது, அங்கு பணியிலிருந்த மருத்துவமனை காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் ஆம்ரோஸ் மற்றும் பாலசுப்பிரமணியம் ஆகியோர் அவரை மடக்கிப் பிடித்து  விசாரணை செய்தபோது அவர் வசம் எதுவும் இல்லை. இருப்பினும் மேற்படி உதவி ஆய்வாளர்கள் இருவரும் சந்தேகத்தின் பேரில் அந்நபரை எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் அவர் சங்கிலியை விழுங்கியிருப்பது தெரியவந்தது.  அந்த சங்கிலியை வயிற்றிலிருந்து வெளியே எடுக்க மருத்துவர்கள் முயற்சி செய்து வருகின்றனர். முடியாத பட்சத்தில் அறுவை சிகிச்சை செய்து  வெளியே எடுக்க உள்ளதாக  மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    விசாரணையில் அந்நபரின் பெயர் கமலக்கண்ணன் (28) என்றும்,  திருவல்லிக்கேணி பல்லவன் சாலையை சேர்ந்தவர் என்றும், அவர் தனது  நண்பர் சையது உசேன் என்பவருடன் சேர்ந்து ஆட்டோவில் மருத்துவமனைக்கு வந்து, அவரை பார்க்கிங் பகுதியில் தயராக நிற்கும்படி கூறிவிட்டு,  தான் மட்டும் சங்கிலியை அறுத்துகொண்டு தப்பிக்க ஓடியபோது போலீசார் மடக்கி பிடித்ததால், அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக சங்கிலியை விழுங்கிவிட்டதாக தெரியவந்தது. மேலும் மருத்துவமனை பார்க்கிங் பகுதியில் காத்திருந்த சையது உசேனை போலீசார் பிடித்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

    தங்க சங்கிலியை விழுங்கிவிட்டு தப்பியோட முயன்ற நபரை பிடித்து, அவர் கைவசம்  திருடிய சங்கிலி இல்லாமல் இருந்தும் அவர் விழுங்கியிருக்கலாம் என்று சமயோசிதமாக சிந்தித்து, அவரை எக்ஸ்ரே எடுத்து உண்மையை கண்டுபிடித்த உதவி ஆய்வாளர்கள் ஆம்ரோஸ் மற்றும் பாலசுப்பிரமணியம் ஆகிய இருவரையும் சென்னை மாநகர காவல் ஆணையாளர் வெகுவாக பாராட்டினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai