Enable Javscript for better performance
மக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் வேட்புமனுதாக்கல் நாளை மறுநாள் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    மக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் வேட்புமனுதாக்கல் நாளை மறுநாள் தொடக்கம்

    By dn  |   Published on : 27th March 2014 07:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    electionvoting

    மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் சனிக்கிழமை (மார்ச் 29) தொடங்குகிறது. வேட்பாளர்களின் செலவுக் கணக்குகளை கண்காணிக்க மத்திய அரசுத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பார்வையாளர்களாக வரவுள்ளனர்.

      மக்களவைத் தேர்தல் பிரசாரம் தமிழகத்தில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தேர்தலுக்கான மனுதாக்கல் சனிக்கிழமை தொடங்குகிறது. மார்ச் 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், மார்ச் 31 ஆம் தேதி தெலுங்கு வருடப் பிறப்பு என்பதாலும் இரண்டு நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது.

      இதன்பின்பு, ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

      வேட்பாளர்களுக்கு கட்டுப்பாடுகள்: வேட்புமனுதாக்கல் செய்யும் வேட்பாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்துக்குள் ஊர்வலமாகவோ, வாகனங்கள் சூழவோ வரக்கூடாது. 100 மீட்டருக்குள்ளாக வேட்பாளருடன் மூன்று கார்கள் மட்டுமே வர அனுமதிக்கப்பட்டுள்ளது.

       மேலும், தேர்தல் அதிகாரியின் அலுவலகத்துக்குள் வேட்பாளருடன் ஐந்து பேர் வர அனுமதிக்கப்படுவர்.

      ஏப்ரல் 1 முதல் தீவிரமாகும்: மார்ச் 29 ஆம் தேதி (சனிக்கிழமை) வேட்புமனு தொடங்கினாலும், அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வருவதால் ஏப்ரல் 1 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் வேட்புமனு தாக்கல் தீவிரமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேட்புமனு தாக்கல் செய்த தேதியில் இருந்து பிரசாரத்துக்காக செய்யப்படும் செலவுகள் அனைத்தும் வேட்பாளர்களின் கணக்கில் வரும். வேட்பாளர்களின் செலவுக் கணக்குகளை கண்காணிக்க ஒரு மக்களவைத் தொகுதிக்கு இரண்டு பார்வையாளர்கள் வீதம் நியமிக்கப்பட உள்ளனர். அவர்கள் ஓரிரு நாட்களில் தங்களது பணிகளைத் தொடங்குவார்கள் என்று தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

       வேட்புமனு தாக்கல் முடிவடையும் தினமான ஏப்ரல் 5 ஆம் தேதியன்று பொது பார்வையாளர்கள் நியமிக்கப்படுவர். ஒரு தொகுதிக்கு ஒருவர் வீதம் 39 தொகுதிகளுக்கும் பொதுப் பார்வையாளர் நியமனம் செய்யப்படுவர்.

      தேர்தல் நடத்தும் அதிகாரிகள்: சென்னையில் மூன்று தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். வடசென்னை தொகுதிக்கு எம்.லட்சுமியும், மத்திய சென்னைக்கு அருண் சுந்தர் தயாளனும், தென் சென்னை தொகுதிக்கு ஆனந்த் குமாரும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

       இதேபோன்று ஒவ்வொரு தொகுதிக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai