Enable Javscript for better performance
மணிமுத்தாறு, கடனாநதி அணைகள் மூடல்:  பாபநாசம் அணையில் 1400 கனஅடி தண்ணீர் திறப்பு - Dinamani

சுடச்சுட

    

    மணிமுத்தாறு, கடனாநதி அணைகள் மூடல்:  பாபநாசம் அணையில் 1400 கனஅடி தண்ணீர் திறப்பு

    Published on : 14th September 2014 01:32 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து 1,400 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மணிமுத்தாறு, கடனாநதி அணைகள் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டன.

    நிகழ் கார் பருவ சாகுபடிக்கு கடந்த ஜூலை 4 ஆம் தேதி பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, அடவிநயினார் உள்ளிட்ட அணைகளில் இருந்தும் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவ மழை சரிவர பெய்யாததால் எதிர்பார்த்தவாறு அணைகள் முழு கொள்ளளவை எட்டவில்லை. எனினும் அவ்வப்போது பெய்து வரும் மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பாசனத்திற்கு தடையின்றி தண்ணீர் திறக்கப்படுகிறது.

    தாமிரவருணி பாசனத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையம் கால்வாய், திருநெல்வேலி கால்வாய், கோடகன் கால்வாய் ஆகிய கால்வாய்கள் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு தண்ணீர் திறக்கவில்லை.
    அணைகளின் நீர்மட்டம்: ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி பாபநாசம் அணையின் நீர்மட்டம் 90.80 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 552.53 கனஅடி நீர்வரத்து இருந்தது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. விநாடிக்கு அணையில் 1,400 கனஅடி திறந்து விடப்படுகிறது.

    அணைகள் மூடல்: சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 93.37 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 55.65 அடியாகவும் இருந்தது. மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 8 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து பெருங்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதை அடுத்து ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டது.

    கடனாநதி அணையின் நீர்மட்டம் 69.20 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 65.00 அடியாகவும் இருந்தது. கடனாநதி அணைக்கு விநாடிக்கு 105 கனஅடியும், ராமநதி அணைக்கு விநாடிக்கு 24 கனஅடியும் நீர்வரத்து இருந்தது. கடனாநதி அணை மூடப்பட்டது. ராமநதி அணையில் இருந்து 40 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 40.59 அடியாகவும், குண்டாறு அணையின் நீர்மட்டம் 36.10 அடியாகவும், அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 111.50 அடியாகவும், வடக்குபச்சையாறு அணையின் நீர்மட்டம் 4.00 அடியாகவும், நம்பியாறு அணையின் நீர்மட்டம் 8.20 அடியாகவும், கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 15.00 அடியாகவும் இருந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai