Enable Javscript for better performance
மாணவர்கள் மோதல்: மாநிலக் கல்லூரி முதல்வர் வேலூருக்கு மாற்றம்- Dinamani

சுடச்சுட

    

    மாணவர்கள் மோதல்: மாநிலக் கல்லூரி முதல்வர் வேலூருக்கு மாற்றம்

    By நெல்சன்  |   Published on : 14th September 2014 08:31 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னை மாநிலக் கல்லூரியில் மாணவர்கள் மோதலைத் தொடர்ந்து கல்லூரியின் முதல்வர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.வேலூர் அரசு கல்லூரி முதல்வராக அவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை மாநிலக் கல்லூரியில் கடந்த செவ்வாய்க்கிழமை (செப்.9) கல்லூரிக்குள்ளேயே மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இரண்டு மாணவர்கள் கத்தி குத்துக்கு ஆளாகி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த மோதல் சம்பவத்தின் போது கல்லூரி முதல்வர் முகமது இப்ராஹிம், மாநகரப் போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பஸ் படிக்கட்டு பயணத்தைத் தடுப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றிருந்தார்.

    இந்த நிலையில், மாணவர்கள் மோதலைக் கட்டுப்படுத்துவதற்காக அப்பகுதியில் இருந்த போலீஸார் கல்லூரிக்குள் செல்ல முயன்றபோது, கல்லூரி பேராசிரியர்கள் அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டதாக கூறப்பட்டது.சம்பவத்தின்போது கல்லூரியில் முதல்வர் இல்லாதது, கல்லூரிக்குள் போலீஸாரை அனுமதிக்காதது போன்ற காரணங்களே மாணவர்கள் மோதலைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதற்கு காரணம் என போலீஸார் தரப்பில் உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், கல்லூரி முதல்வரை வேலூர் அரசு கல்லூரிக்கு பணியிடமாற்ற செய்து கல்லூரி கல்வி இயக்குநரகம் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது கல்லூரி பேராசிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மாணவர்கள் மோதலின்போது, மாநகரப் போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு முதல்வர் சென்றிருந்தார். மேலும், கல்லூரிக்குள் போலீஸாரை அனுமதிக்க எந்வொரு பேராசிரியரும் மறுப்பு தெரிவிக்கவில்லை.

    கல்லூரியில் மாணவர்கள் மோதல் என்பது முன்னர் தொடர்கதையாகி வந்த நிலையில், அனைத்து பேராசிரியர்களின் தீவிர முயற்சி காரணமாக கடந்த 14 மாதங்களில் இதுபோன்ற இரண்டு சம்பவங்கள் மட்டுமே நடைபெற்றுள்ளன.

    இந்த நிலையில், கல்லூரி கல்வி இயக்குநரகத்தின் இந்த நடவடிக்கை கல்லூரி நிர்வாகத்தின் முயற்சிகளுக்கு தடைக்கல்லாக அமையுமே தவிர, மாணவர் மோதலுக்கு தீர்வாக அமையாது என கல்லூரி பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai