Enable Javscript for better performance
ஆந்திர சம்பவத்தில் பாதித்த குடும்பத்தினருக்கு அரசுப் பணி-வனப் பகுதியில் நிலம் வேண்டும் எனக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    ஆந்திர சம்பவத்தில் பாதித்த குடும்பத்தினருக்கு அரசுப் பணி-வனப் பகுதியில் நிலம் வேண்டும் எனக் கோரிக்கை

    By DN  |   Published on : 17th April 2015 09:37 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆந்திர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம், தேசிய பழங்குடியின ஆணையத்தின் துணைத் தலைவர் ரவி தாகூர் இன்று நேரில் விசாரணை நடத்தினார்.

    சென்னையில் நடைபெற்ற இந்த விசாரணையைத் தொடர்ந்து, தமிழக தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன், வனத் துறை அதிகாரிகள், அலுவலர்கள் உள்ளிட்டோரிடமும் ரவி தாகூர் ஆலோசனைகளை மேற்கொண்டார்.

    சென்னை சேப்பாக்கத்தில் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் தமிழக தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், பொதுத் துறை செயலாளர் யத்தேந்திர ஸ்வைன், வனத்துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ் மிஸ்ரா, தாழ்த்தப்பட்டோர்-பழங்குடியின நலத் துறை செயலாளர் சிவசங்கரன், முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் உள்ளிட்ட அதிகாரிகள் வந்தனர். அவர்களுடன் ரவி தாகூர் ஆலோசனை மேற்கொண்டார்.

    இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு பழங்குடியின மக்கள் கூட்டமைப்பின் சார்பில் ரவி தாகூரிடம் மனு அளிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக, பழங்குடியின மக்கள் கூட்டமைப்பின் தலைவர் கே.ஏ.குணசேகரன் கூறியதாவது:

    ஆந்திரத்தில் சம்பவம் நடந்த இடத்தை மத்திய புலனாய்வுத் துறையின் மூலமாக ஆய்வு செய்ய வேண்டும். வனத்துறை முழுவதையும் ஆய்வுக்கு உட்படுத்துவது அவசியமாகும்.

    பாதிக்கப்பட்ட 20 பேரில் 13 பேர் பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்தோர். அவர்களுக்கு வனஉரிமைச் சட்டத்தின் கீழ், வனப்பகுதியிலேயே 10 ஏக்கர் நிலமும், தமிழக வனத் துறையில் அரசுப் பணியையும் அளிக்க வேண்டும். இந்தக் கோரிக்கையை கொள்கை அளவில் ஒப்புக் கொள்வதாக தமிழக வனத்துறை தெரிவித்துள்ளது.

    பழங்குடியினர் தொடர்பான பிரச்னைகள் குறித்து மேலும் விவரங்களைச் சேகரித்து அனுப்புமாறு ஆணையத்தின் துணைத் தலைவர் ரவி தாகூர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    சென்னையில் பிற்பகல் வரை விசாரணைகளை மேற்கொண்ட ரவி தாகூர், ஆந்திரம் புறப்பட்டுச் சென்றார். சம்பவ இடத்தை நாளை சனிக்கிழமையன்று நேரில் ஆய்வு செய்யும் அவர், அந்த மாநில அதிகாரிகளுடனும் ஆலோசனைகளை மேற்கொள்ளவுள்ளார் என்று தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai