Enable Javscript for better performance
சர்ச்சையை கிளப்பியுள்ள மத்தியச் சிறை விடியோ விவகாரம் - Dinamani

சுடச்சுட

    

    சர்ச்சையை கிளப்பியுள்ள மத்தியச் சிறை விடியோ விவகாரம்

    By கோவை  |   Published on : 17th April 2015 07:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை மத்திய சிறையில் கைதிகள் துன்புறுத்தலுக்கு  உள்ளாக்கப்படுதாகக் காட்டும் விடியோப் பதிவு வெளியான விவகாரம் பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

     சிறைக் கைதிகள் நடத்தப்படும் விதம் குறித்து வரைமுறைகள் உள்ள போது, விடியோப் பதிவில் காட்டப்பட்டுள்ளது போல் கைதிகள் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மனித உரிமை அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

    விடியோ விவகாரம்: கோவை மத்தியச் சிறையில் கைதிகள் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவது போல் காட்டும் விடியோக் காட்சிகள் வியாழக்கிழமை காட்சி ஊடகங்களில் வெளியானது. வெளியான விடியோப் பதிவில், சிறைக் கைதிகள் மூவர் தரையில் தண்ணீர் நிரம்பிய அறைக்குள் தனித் தனியாக அடைக்கப்பட்டிருப்பதும், அந்த அறையிலேயே சாப்பாடு, உறக்கம் என அவர்களது நாள்கள் கழிவதாகவும் காட்டப்பட்டுள்ளது.

     அந்த விடியோக் காட்சி குறித்து மத்திய சிறை காவலர்கள் சிலரிடம் விசாரித்த போது, காட்சி ஊடகங்களில் வெளியான விடியோ, கடந்த மார்ச் மாதம் கோவை மத்திய சிறையில் எடுக்கப்பட்டதாகத் தெரிய வந்தது. மேலும், அந்த விடியோவில் காட்டப்படும் அப்பகுதி, சிறைக்குள் குற்ற நடவடிக்கைகள், சிறைத் துறை நிர்வாகத்துக்கு கட்டுப்படாமல் செயல்படும் கைதிகளை தனிமையில் அடைத்து வைக்கப்படும் இடமாகும். விடியோப் பதிவில் காட்டப்படும் மூவரில் நவீன், தேவராஜ் ஆகிய கைதிகள் இருவரும் வேலூர் மத்திய சிறையில் ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் காரணமாக கோவை மத்தியச் சிறைக்கு சமீபத்தில் மாற்றப்பட்டவர்கள். மற்றொருவரான ஐயப்பன் வேறொரு வழக்கில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டவர். அவர், சிறைக்குள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுதல்,  அதிகாரிகளை மிரட்டுதல், ஒழுங்கீன நடவடிக்கைகளுக்காக தனி அறையில் அடைத்து வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    விதிமுறை மீறல்: சிறைத் துறை விதிமுறைப்படி, தண்டனை என்றாலும் கூட, அந்த குறிப்பிட்ட தனி அறைகளில் கைதிகளை ஏழு நாள்களுக்கு மேல் அடைத்து வைக்கக் கூடாது. ஆனால், அவர்கள் மூவரும் அங்கு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அடைக்கப்பட்டுள்ளனர். அடைக்கப்பட்டுள்ள அறைகளில் தரையில் மட்டுமே உறங்க முடியும். தண்டனை காரணமாக, அவர்கள் படுத்து உறங்கும் தரையில் தண்ணீர் விடப்பட்டு, உள்ளாடையுடன் உள்ளே அடைக்கப்பட்டுள்ளனர் என சிறைக் காவலர்கள் கூறினர்.

     மனிதனுக்கு தூக்கம் இல்லாத நிலை தொடரும் போது, அவரது மனநிலை பாதிப்புக்கு உள்ளாகும் என்பது இயல்பான ஒன்று. இதில், கைதிகள் இவ்வாறு துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதும் அது போன்ற செயலாக இருக்கலாம்.

    அதிகாரிகளை மிரட்டும் செயல்: இது குறித்து மத்திய சிறைக் கண்காணிப்பார் கே.ஆனந்தனிடம் கேட்ட போது, சிறை அதிகாரிகளை மிரட்டும் வகையில் இந்த விடியோ வெளியிடப்பட்டுள்ளது.

    விடியோவில் வரும் கைதிகள், வேலூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து ஒழுங்கீன நடவடிக்கைகளால் கோவைக்கு மாற்றப்பட்டவர்கள்.இங்கும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதால், அவர்களை தனிமையில் அடைத்து, கண்காணிக்கிறோம். இது குறித்த விசாரணைக்குப் பிறகே அனைத்தும் தெரிய வரும் என்றார்.

    மனித உரிமை மீறல்: கோவை மனித உரிமைகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சாரதி கூறுகையில், "தேசிய மனித உரிமைகள் சட்டத்தில் ஒரு கைதியை எவ்வாறு நடத்த வேண்டும் என்று விளக்கப்பட்டுள்ளது. தவிர, சிறைத் துறை விதிகளில் ஒரு கைதி நடத்த வேண்டிய வழிமுறைகள் குறித்து கூறப்பட்டுள்ளது.

    வெளியாகியுள்ள விடியோ காட்சிகள் உண்மையானவை எனில், அவை மனித உரிமை மீறலாகும். கைதிகள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவது மோசமான செயல். இது குறித்து உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்" என்றார்.

     சிறைத் துறை கூடுதல் டி.ஜி.பி. திரிபாதியிடம் கேட்ட போது, இது குறித்து உரிய விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

    இதற்கிடையில், வியாழக்கிழமை சம்பந்தப்பட்ட கைதிகள் மூவரிடமும் சிறைத் துறையினர் விசாரணை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai