Enable Javscript for better performance
நெல்லையில் செந்தூரம், அல்போன்சா ரக மாம்பழ வரத்து அதிகரிப்பு- Dinamani

சுடச்சுட

  

  நெல்லையில் செந்தூரம், அல்போன்சா ரக மாம்பழ வரத்து அதிகரிப்பு

  Published on : 17th April 2015 02:37 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  mango

  திருநெல்வேலி மாவட்டத்தில் கோடை மாம்பழ சீசன் தொடங்கியுள்ளது. செந்தூரம், அல்போன்சா ரகங்கள் கிலோ ரூ.50 முதல் 70 வரை விற்பனைக்கு வந்துள்ளன.

  திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் மாமரங்கள் அதிகளவில் உள்ளன.

  செங்கோட்டை, தென்காசி, கடையம், ஆழ்வார்குறிச்சி, களக்காடு ஆகிய பகுதிகளில் மாங்காய் உற்பத்தி அதிகம். இம் மாவட்டத்தில் மொத்தம் 6,200 ஹெக்டேர் பரப்பளவில் மாமர தோட்டங்கள் உள்ளன.  செந்தூரம், நீலம், பெங்களூரா, பங்கனப்பள்ளி, அல்போன்சா, இமாம்பசந்த் ஆகிய ரகங்கள் பயிரிடப்படுகிறது.

  ஆண்டுதோறும் ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் தொடங்கும் கோடை மாம்பழ சீசன் ஆகஸ்ட் மாதம் முடிவது வரை நீடிக்கும். செந்தூரமும், பங்கனப்பள்ளியும் கோடை சீசனில் முதலில் விற்பனைக்கு வரும் இறுதியாகதான் நீலம் வகை விற்பனைக்கு வரும். அதன்படி இப்போது செந்தூரம் ரக மாம்பழம் கிலோ ரூ.60-க்கும், அல்போன்சா ரகம் கிலோ ரூ.50-க்கும் விற்பனைக்கு வந்துள்ளன.

  இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:தமிழகத்தில் தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்கள்தான் மாம்பழ உற்பத்தியில் முன்னணியில் உள்ளன. திருநெல்வேலி மாவட்டத்தில் ஆண்டுதோறும் சராசரியாக 15 ஆயிரம் டன் மாம்பழங்கள் உற்பத்தியாகின்றன. அனைத்துப் பகுதிகளிலும் கோடைக்கு பின்பு மாங்காய்கள் கிடைப்பது இல்லை. திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மட்டும் அக்டோபர், நவம்பர் மாதங்களிலும் மாங்காய்கள் கிடைக்கின்றன. இந்தப் பருவத்தில் பழமாக மாற்றாமல் காயாக தமிழகத்தின் அனைத்து சந்தைகளுக்கும் வியாபாரிகள் அனுப்புகிறார்கள். கோடை மாம்பழ சீசனை காட்டிலும் இந்த இடைப்பருவ காய்ப்பின்போது வருவாய் அதிகம் கிடைத்து வருகிறது. இது இந்த இரு மாவட்ட மா விவசாயிகளுக்கு கிடைத்துள்ள தனித்தன்மை.

  மாம்பழங்களை நேரடியாக சந்தைப்படுத்த விவசாயிகளுக்கு வழியில்லாமல் உள்ளது. அதனால் பெரும்பாலும் குத்தைதாரர்களிடம் மரங்களை அறுவடைக்குக் கொடுக்கும் பழக்கமே உள்ளது. இதனால் அதிக விளைச்சல் கண்டாலும் குறைந்தபட்ச வருவாயை மட்டுமே விவசாயிகள் பெற்று வருகிறார்கள். இதைத்தடுக்க தோட்டக்கலைத்துறையினர் ஏற்றுமதி மையங்களை அமைக்கலாம். தாமிரவருணி நதியின் கரையோரம் மாம்பழக்கூழ் ஆலைகளை ஏற்படுத்தவும், புதிய திட்டங்களின் மூலம் மாமர நடவுப்பணிகளை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

  அடர்நடவுப் பணிகள் தீவிரம்: இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் (பொ) ஜி.திரவியம் கூறியதாவது:

  திருநெல்வேலி மாவட்டத்தில் மா அடர் நடவு திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டில் சுமார் 60 ஹெக்டேரில் மா மரங்கள் நடப்பட்டுள்ளன. சாதாரணமாக மாமரங்களை 10 மீட்டர் நீளம், அகலத்தில் இடைவெளி விட்டு நடுவார்கள். ஆனால், இந்தப் புதிய திட்டத்தின் கீழ் 5 மீட்டர் நீளம், அகலத்தில் அருகருகே மா மரக்கன்றுகள் நடப்படும். ஏனெனில், மாமரங்களில் அறுவடைப்பணி கடினம். உயரத்தில் கிடக்கும் மாம்பழங்களை லாவகமாக பறிக்காவிட்டால் கீழே விழுந்து அடிபட்டு சேதமாகிவிடும். அதனை கருத்தில் கொண்டு அருகில் மரங்களை நட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  அடர்நடவு திட்டத்தின் கீழ் ஒரு ஹெக்டேருக்கு 400 மரக்கன்றுகளை நட முடியும். பழைய நடவு முறையில் 100 கன்றுகள் மட்டுமே நட முடியும். சாதாரண செந்தூரம், நீலம் வகை மட்டுமன்றி மிகவும் அதிக வருவாய் தரும் இமாம்பசந்த், பெங்களூரா போன்ற ரகங்களும் அடர்நடவுப் பணியின் கீழ் நடப்பட்டுள்ளன. இதற்கான மரக்கன்றுகள் கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள அரசு தோட்டக்கலைத்துறை பண்ணைகளில்இருந்து வழங்கப்பட்டுள்ளன.

  இதுதவிர அடர்நடவு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. முதல் ஆண்டில் ஹெக்டேருக்கு ரூ. 9 ஆயிரத்து 840-ம், இரண்டாவது மற்றும் மூன்றாவது ஆண்டுகளில் தலா ரூ.3 ஆயிரத்து 280-ம் வழங்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்ட்ததில் இந்த ஆண்டில் நல்ல மழை பெய்துள்ளதால் கடந்த ஆண்டு உற்பத்தியான 15 ஆயிரம் டன்னை எளிதாக எட்ட வாய்ப்புள்ளது என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai