Enable Javscript for better performance
நேரம், பாதை, வேகம் ஆகிய மூன்று மந்திரங்களையும் சரியாக கையாண்டால் குறிக்கோளை அடையலாம்:  மயில்சாமி அண்ணாதுரை - Dinamani

சுடச்சுட

    

    நேரம், பாதை, வேகம் ஆகிய மூன்று மந்திரங்களையும் சரியாக கையாண்டால் குறிக்கோளை அடையலாம்:  மயில்சாமி அண்ணாதுரை

    By dn  |   Published on : 01st February 2015 10:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வாழ்வில் நேரம், பாதை, வேகம் ஆகிய மூன்று மந்திரங்களையும் சரியாக கையாண்டால் எளிதில் குறிக்கோளை அடையலாம் என விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசினார். சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியின் 29-ஆம் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

    விழாவில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), சந்திரன் (சந்திரயான்), செவ்வாய் (மங்கள்யான்)-க்கு செயற்கைகோள்களை அனுப்பி வெற்றிக் கண்டுள்ளது. இதுபோன்று செயற்கைகோள்களை அனுப்பும் போது, சரியான நேரம், பாதை, வேகம் ஆகியவற்றில் கவனம் செலுத்தியாக வேண்டும்.

    சந்திரன், செவ்வாய்க்குச் செயற்கைகோள்களை அனுப்பும்போது, ஒவ்வொரு விநாடியிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. உதாரணமாக, செவ்வாய்க் கோள் சராசரியாக விநாடிக்கு 34.கி.மீ வேகத்தில் நகருகிறது. ஆகையால் செவ்வாய்க்கு பயணம் செய்த அந்தச் செயற்கைகோள், தனது பயணத்தை 9 மாதங்களுக்கு முன்னரே தொடங்கியது. நேரம், பாதை, வேகம் ஆகியவற்றை கணக்கிடுவதில் ஏதேனும் ஒன்றில் தவறு நேர்ந்தாலும் திட்டம் தோல்வியில் முடியும் வாய்ப்புள்ளது.

    இதேபோல், கல்விக்கும் சரியான நேரம், பாதை, வேகம் ஆகிய மூன்றும் பொருந்தும்.  கல்வியில் வெற்றிப் பெற இந்த மூன்றும் மந்திரங்களும் தேவைப்படுகின்றன. இன்றையச் சூழலில் வாய்ப்புகள் நிறைந்து காணப்படுகிறது. இந்த மூன்று மந்திரங்கள் உறு துணையுடன் வாய்ப்புகளைப் பயன்படுத்தி, குறிக்கோள்களை எளிதாக அடைய முடியும். கோவை மாவட்டம், கோதவாடி என்ற கிராமத்தில் எனது பள்ளிப் பருவம் தொடங்கியது. அந்தப் பள்ளி மாட்டுக் கொட்டகையில் தான் அமைந்திருந்தது. நாங்கள் மாட்டுக் கொட்டகையைச் சுத்தம் செய்தப் பின்னரே, வகுப்புகள் தொடங்கும் நிலை இருந்தது.

    ஆனால், இன்று நான் அடைந்திருக்கும் ஒரு உயரமான நிலைக்கு இது ஒரு பெரிய விஷயமில்லை. அதேபோல், சாதாரண பள்ளி அல்லது சிறந்தப் பள்ளியில் படிப்பது என்பதும் ஒரு பெரிய விஷயமில்லை. ஒரு விண்கலத்தை, அமெரிக்காவில் நாசாவின் கோடார்ட் ஸ்பேஸ் பிளைட் மையம் அல்லது ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து அனுப்பினாலும், இந்த இரண்டுக்கும் இலக்கு ஒன்று தான். அவை இரண்டும் இலக்கை அடைகிறது என்றார் அவர்.

    விழாவில் முன்னதாக கல்வி, விளையாட்டு ஆகியவற்றில் சிறப்பாக விளங்கிய மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கி, விழா மலரை விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை வெளியிட்டார். விழாவில் இறுதியில் மனித வாழ்க்கையில் எண்களின் பங்களிப்பை மையமாக வைத்து, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி முதல்வர் அமுத லட்சுமி, துணை முதல்வர் ஜி.எஸ்.கணேசன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai