சுடச்சுட

  

  38-ஆவது புத்தகக் காட்சி: ஜன.9-இல் துவக்கம் 700 அரங்குகள், 5 லட்சம் புத்தகங்கள்

  By dn  |   Published on : 06th January 2015 07:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பப்பாசியின் 38-ஆவது புத்தகக் காட்சி ஜனவரி 9-ஆம் தேதி தொடங்கி மொத்தம் 13 நாள்கள் நடைபெற உள்ளன.

  700 அரங்குகளில் மொத்தம் 5 லட்சம் புத்தகங்கள் விற்பனைக்கு வர உள்ளன.

  தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் (பப்பாசி) தலைவர் மீனாட்சி சுந்தரம்,  செயலாளர் புகழேந்தி, பொருளாளர் ஒளிவண்ணன் ஆகியோர் இணைந்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் திங்கள்கிழமை கூறியது:-

  சென்னை நந்தனம் ஒய்.எம்.சி. மைதானத்தில் ஜனவரி 9-ஆம் தேதி புத்தகக் காட்சி தொடங்குகிறது. ஜனவரி 21-ஆம் தேதி நடைபெற உள்ளது.

  விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை காட்சியைத் துவக்கி வைக்கிறார்.

  அரசு விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையும், மற்ற நாள்களில் பிற்பகல் 2 மணி முதல் 9 மணி வரையும் காட்சி நடைபெறும்.

  30 ஆயிரம் புதிய புத்தகங்கள்: இந்தக் கண்காட்சிக்காகவே பல்வேறு பதிப்பாளர்கள் புதிய புத்தகங்களைப் பதிப்பித்துள்ளனர். சுமார் 30 ஆயிரம் புதிய புத்தகங்கள் பல்வேறு தலைப்புகளின் கீழ் விற்பனைக்கு வர உள்ளன. கலை, இலக்கியம், விஞ்ஞானம் என் அனைத்து பிரிவு புத்தகங்களும் இந்தக் காட்சியில் இடம்பெறும்.

  வாசகர்களுக்கான வசதிகள்: கடந்த ஆண்டு புத்தகக் காட்சியில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வாசகர்கள் கண்காட்சிக்கு வந்தனர். இந்த வருடம் அந்த எண்ணிக்கை தாண்டும் என எதிர்பார்க்கிறோம்.

  சென்னை நந்தனம் கல்லூரியில் கார்களில் நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கிருந்து வாசகர்களை இலவசமாக கணகாட்சிகளுக்கு வேன்களில் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 5 வேன்கள் இந்தப் பணியில் ஈடுபட உள்ளன.

  கண்காட்சியின் ஏடிஎம் வசதியும் செய்து தரப்படும். புத்தகங்களை வாங்கி, அவற்றைக் கையோடு எடுத்துச் செல்ல விரும்பாவிட்டால், கொரியர் மூலம் அனுப்பி வைக்கும் வசதியும் உள்ளது. உணவு விடுதி அமைக்கப்படும். கழிப்பறை வசதிகள் உண்டு.

  10 சதவீதம் கழிவு: புத்தகக் காட்சியில் வாங்கப்படும் அனைத்துப் புத்தகங்களும் 10 சதவீதம் கழிவு உண்டு.

  காட்சிக்கான நுழைவுக் கட்டணம் ரூ.10 ஆகும். 12 வயதுக்கு உள்பட சிறுவர்களுக்கு நுழைவு கட்டணம் இல்லை. பலர் தினமும் புத்தகக் காட்சிக்கு வருவர். அவர்கள் ரூ.50 கொடுத்து சீசன் டிக்கெட் போல வாங்கிக் கொள்ளும் வசதியும் இந்த முறை செய்துள்ளோம்.

  கண்காட்சிக்கு வருபவரின் நுழைவுச் சீட்டுகளில் குலுக்கள் முறையில் தினமும் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படும்.

  கண்காட்சியின் பொதுமேடையில் தினமும் எழுத்தாளர்கள், அறிஞர்கள் பங்கேற்கும் பல்வேறு நிகழச்சிகளும் நடைபெறும். வாசகர்கள் எழுத்தாளர்கள் சந்திப்பு நடைபெறும்.

  இளம் தலைமுறையினரை ஊக்குவிக்கும் நோக்குடன் மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள், ஓவியப் போட்டிகள், சிறுகதைப் போட்டிகள் நடைபெறும்.

  குறும்பட அரங்கு: குறும்பட அரங்கு அமைத்து, குறும்படப் போட்டிகள் நடத்தப்படுவதுடன், குறும்படங்களும் திரையிடப்படும்.

  நிரந்தரப் புத்தகக் காட்சி: புத்தகக் காட்சி சிறப்பாக நடைபெற அரசு அனைத்து உதவிகளையும் செய்கிறது. மேலும் புத்தகக் காட்சி நடத்துவதற்கு என்றே அரசு ஒரு நிரந்தர இடத்தை ஒதுக்கித் தர வேண்டும் என்றார்கள்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai