Enable Javscript for better performance
தேமுதிகவுக்கு ஜி. ராமகிருஷ்ணன் வேண்டுகோள்- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் தங்களது கட்சி வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என தேமுதிகவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    வரும் பிப்ரவரி 13-ஆம் தேதி நடைபெறவுள்ள ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் வளர்மதி (அதிமுக), ஆனந்த் (திமுக), சுப்பிரமணியம் (பாஜக), அண்ணாதுரை (மார்க்சிஸ்ட்) ஆகியோருக்கு இடையே நான்கு முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிக இந்த இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. பாஜகவுக்கு ஆதரவளிப்பது குறித்து தேமுதிக இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.ஆனால், தேமுதிக தலைவர் விஜயகாந்தை, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மாநில அமைப்புப் பொதுச்செயலாளர் எஸ். மோகன்ராஜூலு ஆகியோர் நேரில் சந்தித்து ஆதரவு கோரினர்.

    சில நாள்களுக்கு செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, ஸ்ரீரங்கத்தில் பாஜக வேட்பாளரை ஆதரித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதா ஆகியோர் பிரசாரம் செய்ய இருப்பதாகத் தெரிவித்தார்.

    இந்நிலையில் தங்களது கட்சி வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என தேமுதிகவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.இது தொடர்பாக தினமணி செய்தியாளரிடம் அவர் கூறியதாவது:

    கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் தேமுதிக இருந்தது. கடந்த 8 மாத பாஜக ஆட்சியில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை. காங்கிரஸ் அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளை அவர்களைவிட வேகமாக பாஜக அரசு செயல்படுத்தி வருகிறது. பன்னாட்டு பெருநிறுவனங்களுக்கு ஆதரவாக எதையும் செய்ய மோடி அரசு துணிந்து விட்டது.ஒரு பக்கம் பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படும் பாஜக அரசு, மறுபக்கம் தனது வகுப்புவாத திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. பாஜக அரசின் இந்த மோசமான அணுகுமுறையை உணர்ந்து தேமுதிக தனது நிலைப்பாட்டு மாற்றிக் கொள்ள வேண்டும். ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் க. அண்ணாதுரையை ஆதரிக்க வேண்டும் என்றார் ஜி. ராமகிருஷ்ணன்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai