Enable Javscript for better performance
பழனியில் தைப்பூசத் திருவிழா: திருக்கொடியேற்றத்துடன் துவக்கம்- Dinamani

சுடச்சுட

  

  பழனியில் தைப்பூசத் திருவிழா: திருக்கொடியேற்றத்துடன் துவக்கம்

  By அங்குபாபு  |   Published on : 28th January 2015 05:20 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனியில் அருள்மிகு பெரியநாயகியம்மன் திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழா புதன்கிழமை திருக்கொடியேற்றத்துடன் துவங்கியது.  வரும் பிப்.2ம் தேதி திருக்கல்யாணம், வெள்ளித்தேரோட்டமும், பிப்.3ம் தேதி தைப்பூசத் திருத்தேரோட்டமும் நடைபெறுகிறது.

  பழனியில் நடைபெறும் திருவிழாக்களில் தைப்பூசம் பங்குனி உத்திரம் இருபெரும் திருவிழாக்களாகும்.இதில் தைப்பூசத் திருவிழா பாதயாத்திரைக்கு பிரசித்தி பெற்றதாகும். இத்திருவிழாவை முன்னிட்டு தமிழகம் மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பலநூறு கி.மீ தூரம் பக்தர்கள் பல்வேறு வகையான காவடிகளை ஏந்தி பழனிக்கு பாதயாத்திரை வருகின்றனர். இத்தகைய பெருமை வாய்ந்த தைப்பூசத் திருவிழா பழனி அருள்மிகு பெரியநாயகியம்மன் திருக்கோயிலில் புதன்கிழமை காலை 10.45 மணியளவில் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை இரவு கிராமசாந்தி, அஸ்த்ர தேவர் பூஜை மற்றும் பூமிபூஜை ஆகியன நடைபெற்றது. புதன்கிழமை காலை விக்னேஷ்வர பூஜை, புண்யாவாசனம் ஆகியன நடத்தப்பட்டு அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேதர் முத்துக்குமாரசாமிக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகை பொருட்களால் சோடஷ அபிஷேகமும், அதைத் தொடர்ந்து சோடஷ உபச்சாரமும் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி கொடிமண்டபம் எழுந்தருளினார். 

  கொடிக்கட்டி மண்டபத்தில் ஆறு கலசங்கள் வைத்து மயூரயாகம் நடத்தப்பட்டது. சேவல், மயில், வேல் மற்றும் பூஜை பொருட்கள் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிறக்கொடிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு நான்கு ரத வீதிகளிலும், கோயிலின் உட்பிரகாரத்திலும் வலம் வர செய்யப்பட்டு கொடிக்கட்டி மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டது. முன்னதாக மூலவர், வினாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும், உற்சவ மூர்த்திகளுக்கும் காப்புக் கட்டப்பட்டது.    கொடிகட்டி மண்டபத்தில் ஓதுவா மூர்த்திகள் திருமுறை பாடல்கள், வாத்யபூஜை, கொடிப்பண், சூர்ணிகை வர்ணித்தல் ஆகியவை பாட வேத கோஷங்களுடன் தங்கக்கொடி மரத்தில் திருக்கொடியேற்றம் சிறப்பாக  நடைபெற்றது.  கொடிமரத்துக்கு புஷ்ப கைங்கர்ய சபா சார்பில் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கொடியேற்றம் முடிந்த பின் கொடிக்கட்டி மண்டபத்துக்கு எழுந்தருளிய தம்பதி சமேதர் முத்துக்குமாரசாமிக்கு மகாதீபாராதனை காட்டப்பட்டது.

  பூஜைகளை தலைமை குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்ரமணிய குருக்கள், சுந்தரமூர்த்திசிவம் ஆகியோர் செய்தனர்.  10 நாட்கள் நடைபெறும் விழாவை முன்னிட்டு தினமும் அருள்மிகு முத்துக்குமாரசாமி தம்பதி சமேதராக சுவாமி காலை, மாலை வேலைகளில்  தந்தப்பல்லக்கு, வெள்ளி காமதேனு, வெள்ளியானை, வெள்ளி ஆட்டுக்கிடா,  தங்கமயில், தங்ககுதிரை, புதுச்சேரிசப்பரம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் நான்கு இரதவீதிகளில் உலா எழுந்தருள்கிறார். வரும் பிப்.2ம் தேதி திருக்கல்யாணம், வெள்ளித்தேரோட்டமும், பிப்.3ம் தேதி தைப்பூசத் திருத்தேரோட்டமும் நடைபெறவுள்ளது.

  நிறைவு நாளான பிப்.6ம் தேதி தெப்பத்தேரோட்டமும் தொடர்ந்து திருக்கொடி இறக்குதல் ஆகியன நடைபெறவுள்ளது. தைப்பூசக் கொடியேற்ற நிகழ்ச்சியில் பழனி  எம்எல்ஏ., வேணுகோபாலு, பழனிக்கோயில் இணை ஆணையர்(பொறுப்பு) ராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா, நகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், சித்தனாதன் சன்ஸ் செந்தில்குமார், கந்தவிலாஸ் செல்வக்குமார், பாஸ்கரன், பிரசாதஸ்டால் ஹரிஹரமுத்து,  பழனி நகர்மன்ற துணைத் தலைவர் முருகானந்தம், ஶ்ரீசுப்ரமண்யா பொறியியல் கல்லூரி சேர்மன் ஜனார்த்தனன்,  திருப்பூர் லாட்ஜ் மகேஷ்குமார், காண்ட்ராக்டர் நேரு, சங்கராலயம் பாலசுப்ரமணியசாமிகள்,  வள்ளுவர் தியேட்டர் செந்தில்குமார், புஷ்பகைங்கர்ய சபா செயலர் மருதசாமி உள்ளிட்ட ஏராளமான முக்கிய பிரமுகர்களும், அதிகாரிகளும் பங்கேற்றனர்.   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai