சுடச்சுட

  
  nature1

  ஆடுகளின் கழிவுகளை விளை நிலங்களில் அடியுரமாகப் பயன்படுத்தும் பழமையான மந்தை அடைத்தல் முறையை கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் பல தலைமுறைகளாகக் கடைப்பிடித்து வருகின்றனர்.

  மக்கள்தொகை பெருக்கத்துக்கு ஏற்ப உணவுப் பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயத்தால், விவசாயத்தில் பசுமைப் புரட்சி என்ற பெயரில் இயற்கை வேளாண்மைக்குப் பதிலாக செயற்கை உரங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

  இந் நிலையில், இயற்கை வேளாண்மையின் அவசியம் குறித்து, விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் வேளாண் விஞ்ஞானிகள் தற்போது தீவிரம் காட்டி வருகின்றனர்.

  காவிரி டெல்டா மாவட்டமான தஞ்சைக்கு ஈடாக நெல் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளில் சிலர், பல தலைமுறையாக இயற்கை வேளாண்மையை விடாமல் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர்.

  மரம், செடி ஆகியவற்றின் இலைகள், மாட்டுச் சாணம் போன்றவற்றை அடியுரமாக இவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

  மேலும், சிலர் ஆடுகளைப் பட்டியில் அடைக்கும் முறையைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றனர்.

  கிதாரிகள்: நெல், ராகி போன்ற பயிர்களைச் சாகுபடி செய்யும் விவசாயிகள், நாற்றுகளை நடவு செய்வதற்கு முன் விளை நிலத்தில் அடியுரத்துக்காக ஆடு, வாத்து ஆகியவற்றை வேலி அமைத்து அடைப்பர். பட்டியில் அடைக்கப்படும் ஆடுகள் வெளியேற்றும் கழிவுகள், ரோமம் போன்றவை விளை நிலத்துக்கு அடியுரமாகப் பயன்படும்.

  இவ்வாறு விளை நிலங்களில் ஆடு, வாத்து ஆகியவற்றை வேலி அமைத்து பட்டியில் அடைக்கும் தொழிலைச் செய்பவர்கள் கிதாரிகள் என அழைக்கப்படுவர். குரும்பர் இனத்தைச் சேர்ந்த இவர்கள் பல ஆண்டுகளாக, மந்தை போடுதல் அல்லது பட்டி போடும் தொழிலைச் செய்து வருகின்றனர்.

  தற்போது இந்த முறை அழிந்து வந்தாலும், தனது 7 வயது முதல் இத் தொழிலை செய்து வரும் கிதாரியான கனகமுட்லுவைச் சேர்ந்த முனியப்பன் (45) கூறியது: பயிர் நாற்று நடவு செய்ய, விளை நிலத்தைத் தயார் செய்வதற்கு முன், பயிருக்கு அடியுரம் கிடைக்கும் வகையில் விளை நிலத்தில் பட்டி போடுவோம். ஒரு பட்டியில் குறைந்தது 50 முதல் 300 ஆடுகள் வரை அடைப்போம். இவ்வாறு பட்டியில் அடைக்கப்படும் ஆடு ஓன்றுக்கு ஒரு ரூபாய் கட்டணமாக வசூலிப்போம்.

  தற்போது இதற்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், ஆடு வளர்ப்போரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால், 4 அல்லது 5 நபர்களாகச் சேர்ந்து இத் தொழிலைச் செய்து வருகிறோம் என்றார்.

  கிருஷ்ணகிரி அருகே நாட்டான்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புவனேஸ்வரி (45) கூறியது: தற்போது காடு அழிக்கப்பட்ட நிலையில், கால்நடைகளுக்கான மேய்ச்சல் பரப்பளவு குறைந்துவிட்டது. இதனால், கிதாரிகளும் மாற்றுத் தொழிலுக்குச் சென்றுவிட்டனர்.

  இதனால், தொன்றுதொட்டு பல தலைமுறையாகக் கடைப்பிடித்து வந்த இயற்கை விவசாயத்தைத் தொடர முடியாத நிலை ஏற்படுமோ என்ற அச்சத்தில், நாங்களே 50 ஆடுகளை வளர்த்து வருகிறோம். எங்களது விளை நிலத்தில் மட்டுமல்லாமல், மற்றவர்களின் விளை நிலங்களிலும் மந்தை போடுவோம்.

  இதன் மூலம், கூடுதலாக மகசூல் கிடைக்கும். இயற்கை உரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் நோய்த் தாக்குதல் குறைகிறது. மண் மலட்டுத் தன்மையும் அடைவதில்லை என்றார்.

  கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வேளாண் தொழிலில் இயந்திரங்களின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், இயற்கை முறை வேளாண்மையான, இப் பழமையான தொழில் நுட்பத்தை விவசாயிகள் பயன்படுத்தி வருவது வரவேற்கத்தக்கது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai