Enable Javscript for better performance
காவல் நிலையக் கண்காணிப்பு கேமரா: உயர் நீதிமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகள்- Dinamani

சுடச்சுட

    

    காவல் நிலையக் கண்காணிப்பு கேமரா: உயர் நீதிமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகள்

    By dn  |   Published on : 10th March 2015 12:09 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    hc

    தமிழகத்தில் உள்ள 1,567 காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த வழக்குரைஞர் ஐ. பிரகாஷ் ராஜ், "சேஞ்ச் இந்தியா' அமைப்பின் இயக்குநர் பாடம் நாராயணன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித் தனியாக பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தனர்.

    அதில், தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கு, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தனர்.

    இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, 22 மாவட்டங்களில், இதுவரை 170 காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளது. 81 காவல் நிலையங்களில் கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. மீதமுள்ள காவல் நிலையங்களில் பல கட்டங்களாக கேமரா பொருத்தப்படும் என அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

    இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், முதல் கட்டமாக 251 காவல் நிலையங்களில் கேமரா பொருத்தும் பணியை மார்ச் 9-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். அதற்கான அறிக்கையை அடுத்த கட்ட விசாரணையின் போது தாக்கல் செய்ய வேண்டும். அதில் கேமராக்கள் பொருத்தப்படும் இடங்கள் குறித்தும் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

    இந்த நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணை தலைமை நீதிபதி எஸ்.கே. கெளல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, உள்துறைச் செயலர், டிஜிபி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அதில், உயர் நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் 251 காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நிறைவடைந்து விட்டது. இதர காவல் நிலையங்களில் பல்வேறு கட்டங்களாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.

    ஒரு கேமரா காவல் நிலையத்தின் நுழைவு வாயிலிலும், இரண்டு கேமராக்கள் காவல் நிலையத்தின் உள்ளேயும் என ஒவ்வொரு காவல் நிலையத்திலும் தலா 3 கேமராக்கள் பொருத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதைத் தொடர்ந்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

    251 காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடு கடந்த 2012-13-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதன் பிறகு தொடர்ந்து நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தில் இந்தத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு குறித்த எந்தத் தகவலும் இல்லை.

    காவல் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களின் தன்மை குறித்தும், இரவு நேரங்களிலும், மின்தடை ஏற்படும் நேரங்களிலும் இந்த கேமராக்கள் காட்சிகளைப் பதிவு செய்யுமா? எனவும் மனுதாரர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இந்தச் சந்தேகங்களைத் தெளிவுபடுத்தி 6 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். மேலும், இந்த வழக்குக்கு உதவுவதற்காக போலீஸ் ஐ.ஜி. (நிர்வாகம்) ஏப்ரல் 24-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai