
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1எஃப் வழிகாட்டி செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி., சி32 ராக்கெட் மூலம் இஸ்ரோவால் இன்று வியாழக்கிழமை (மார்ச் 10) மாலை 4 மணிக்கு விண்ணில் ஏவுகிறது. 1,425 கிலோ எடை கொண்ட செயற்கைகோளானது முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டதாகும். இதன் செயல்பாட்டை செல்லிடப்பேசி நிறுவனங்கள் ஆர்வமுடன் எதிர்நோக்கியுள்ளன.
இந்தியாவின் பிரத்யேக செயற்கைக்கோள் வழிகாட்டியாக அறிமுகப்படுத்தப்படவுள்ள எஸ்.பி.எஸ். (Standard Positioning System) முறையை செல்லிடப்பேசியில் பயன்படுத்துவதற்கான ஆலோசனைகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ள நிலையில். இப்போது அதற்கான செயலியைத் தயாரிக்கும் பணியில் செல்லிடப்பேசி நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்மூலம், அமெரிக்காவின் ஜி.பி.எஸ். (Global Positioning System) வழிகாட்டியை நாம் பயன்படுத்தாமல், நமது நாட்டின் பிரத்யேக எஸ்.பி.எஸ். வழிகாட்டியை பொதுமக்கள் பயன்படுத்தும் வாய்ப்பு அடுத்த ஆண்டு, மார்ச் மாதத்துக்குள் உருவாகலாம் என இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1 ஏ முதல் ஜி வரையிலான செயற்கைக்கோள்கள் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் தொடர்ந்து விண்ணில் ஏவப்பட்டு வருகின்றன. இதுவரை ஐ.ஆர்.என்.எஸ். 1 ஏ,பி,சி,டி,இ செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.
விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ள 5 செயற்கைக்கோள்களும் நாள்தோறும் 18 மணி நேரத்துக்கு தங்களது பணிகளைச் செய்து வருகின்றன. இந்தச் செயற்கைக்கோள்கள் மூலம் 1,500 கி.மீ. சதுர பரப்பளவுக்கு கடல் வழிகளையும், கடல் எல்லைகளையும் துல்லியமாகக் கண்காணிக்க முடியும். மேலும் தரையிலும், வான்வெளியிலும் செல்லும் அனைத்து வாகனங்களையும் கண்காணிக்க முடியும். இந்தச் செயற்கைக்கோள்கள் இந்தியாவுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டவையாகும்
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். செயற்கைக்கோள்களின் 6-ஆவது செயற்கைக்கோள் வியாழக்கிழமை ஏவப்படுகிறது. ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1ஜி 7-ஆவது செயற்கைக்கோள் மார்ச் இறுதியில் விண்ணில் ஏவப்படும் வாய்ப்பு இருப்பதாக இஸ்ரோ மூத்த விஞ்ஞானி ஒருவர் தெரிவித்தார். இந்த வகையான எஞ்சிய செயற்கைக்கோள்களையும் இந்தியா விண்ணில் செலுத்துவதன் மூலம், இந்தியா மட்டுமல்லாது பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளின் கடல், சாலை, நிலப் பரப்புகளையும் கண்காணிக்க முடியும். இதன்பிறகு, இந்தியா முழுமைக்குமான செயற்கைக்கோள் வழிகாட்டியை உருவாக்கிவிட முடியும்.
மென்பொருள் தேவை: ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். ஏழு செயற்கைக்கோள்களும் முழுமையாக தகவல்களை வழங்கத் தொடங்கியதும், அந்தச் சேவையை செல்லிடப்பேசியில் பயன்படுத்துவதற்கான மென்பொருளை உருவாக்க வேண்டும். இதற்காக இந்தியா மற்றும் உலகளாவிய செல்லிடப்பேசி தயாரிப்பு நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகளுடன் இஸ்ரோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆலோசித்தது.
அமெரிக்காவின் ஜிபிஎஸ் சேவைக்குப் பதிலாக இந்தியாவின் எஸ்பிஎஸ் சேவையை செல்லிடப்பேசி இயங்குதளங்களில் பொருத்தும் வகையில் மென்பொருளை உருவாக்குமாறு அந்த அதிகாரிகளிடம் இஸ்ரோ கேட்டுக் கொண்டது. இதையடுத்து, அதற்கேற்ற செயலியை உருவாக்கும் முதல் கட்டப் பணியில் செல்லிடப்பேசி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
இந்த ஆண்டு இறுதிக்குள் செல்லிடப்பேசிக்கான எஸ்பிஎஸ் வழிகாட்டி மென்பொருள் உருவாக்கப்பட்டு, அடுத்த ஆண்டு மார்ச்சில் அது செயல்பாட்டுக்கு வரும் என இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எஸ்பிஎஸ் உருவாக்கப்பட்டதன் நோக்கம், நமது நாட்டின் தகவல் வழிகாட்டிகளை அமெரிக்காவின் ஜிபிஎஸ் மூலம் தருவதை நிறுத்துவதற்காகவே.
கடல் எல்லையை அறிய முடியும்: ஐ.என்.ஆர்.எஸ்.எஸ். செயற்கைக்கோள்களின் எஸ்பிஎஸ் வழிகாட்டி மூலம் கடல் எல்லைகளை துல்லியமாகக் கண்டறிய முடியும். இதன்மூலம், மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்கும் பிரச்னைக்குத் தீர்வாகவும் இது அமையும் எனக் கூறப்படுகிறது. பாகிஸ்தான், இலங்கைக் கடற்கரைப் பகுதிகளை இந்தச் செயற்கைக்கோள்கள் முழுமையாகக் கண்காணிக்கின்றன. எனவே, இந்த எஸ்பிஎஸ் வசதி முழுமையான செயல்பாட்டுக்கு வந்ததும், மீனவர்களின் படகுகளில் ரிசீவர்கள் பொருத்தப்படும். அவை, இந்திய எல்லையில் மீனவர்கள் இருக்கிறார்களா அல்லது இலங்கை எல்லையில் இருக்கிறார்களா எனச் சுட்டிக் காட்டிவிடும். இதே எச்சரிக்கை கடலோரக் காவல் படைக்கும் தெரிவிக்கப்படும். இதன்மூலம், கடல் எல்லைப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும்.