Enable Javscript for better performance
ரூபாய் நோட்டு விவகாரம்: மத்திய அரசின் முடிவை வரவேற்கிறோம்வைகோ பேட்டி- Dinamani

சுடச்சுட

    

    ரூபாய் நோட்டு விவகாரம்: மத்திய அரசின் முடிவை வரவேற்கிறோம் வைகோ பேட்டி

    By DIN  |   Published on : 26th November 2016 09:02 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    vaico (2)

    கோவை,

    ரூ. 500, 1,000 நோட்டுகளை தடை செய்த மத்திய அரசின் முடிவை வரவேற்பதாக மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறியுள்ளார்.

    ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கோவைக்கு சனிக்கிழமை வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

     ரூபாய் நோட்டுகள் விவகாரத்தில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள முடிவை மதிமுக வரவேற்கிறது. ஏ.டி.எம்.கள், வங்கிகளில் காத்திருக்கும் பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டாலும் அது தாற்காலிகமானதுதான்.

    அறுவை சிகிச்சையின்போது வலி இருக்கும். ஆனால் சிகிச்சைக்குப் பிறகு அது நன்மையையே அளிக்கும் என்பதால் இந்த விஷயத்தில் மோடியை நாங்கள் ஆதரிக்கிறோம்.

    பஞ்சாப் மாநிலத்தில் பாயும் ராவி, பியாஸ் நதிகளின் நீரை, அண்டை மாநிலங்களான ஹரியாணா, ராஜஸ்தான், ஹிமாசலப் பிரதேசம் போன்ற மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாது என்று அந்த மாநில முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் கூறியுள்ளார்.

     பஞ்சாப் அரசின் சட்லஜ்-யமுனை நதிநீர் இணைப்புக் கால்வாய் திட்டத்துக்கான அரசாணையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில், அந்தத் தீர்ப்பை ஏற்க முடியாது என்று கூறியுள்ளார்.

    எனது நண்பராக இருந்தபோதிலும், அண்டை மாநிலங்களுக்கு நீர் வழங்க முடியாது என்று பாதல் கூறுவதை ஏற்க முடியாது. இந்த விவகாரத்தில் அகாலி தளத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியும் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

    நதி நீர் பங்கீடு விவகாரங்களில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் கர்நாடகம், கேரள அரசுகள் செயல்பட்டு வருவதால் தமிழகம் வறட்சியால் பாதிக்கப்பட்டு பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது. அதைப் போலவே தற்போது ஹரியாணா, ராஜஸ்தான், ஹிமாசலப் பிரதேசம் போன்ற மாநிலங்களும் கடுமையாக பாதிக்கப்படும்.

    இதைப் போலவே பாகிஸ்தானுக்குத் தண்ணீர் வழங்க மாட்டோம் என்று பிரதமர் மோடி அறிவித்திருப்பதும் கண்டனத்துக்குரியது. இதைப் பயன்படுத்தி அணை பாதுகாப்பு மசோதா என்ற விஷப் பரீட்சையை மத்திய அரசு மேற்கொள்ள முயற்சிக்கக் கூடாது. அது நாட்டின் ஒற்றுமைக்கு எதிரானதாகவே இருக்கும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai