மக்களின் பிரச்னைகளை தீர்க்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்: ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல்

உயர்மதிப்புடைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 8-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அன்று முதல் மெளனம் காத்து வந்த ரிசர்வ்
மக்களின் பிரச்னைகளை தீர்க்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்: ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல்

மும்பை: உயர்மதிப்புடைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 8-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அன்று முதல் மெளனம் காத்து வந்த ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல், இன்று முதல்முறையாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியின் மூலம் தனது மெளனத்தை கலைத்துள்ளார்.  

அப்போது அவர் கூறுகையில், ரூபாய் நோட்டு விவகாரத்தில், பொதுமக்கள் தினசரி அனுபவித்தும் வரும் நிலைமையை ரிசர்வ் வங்கி கூர்ந்து கண்காணித்து வருகிறது. இந்த விவகாரத்தில் நேர்மையான மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சீராக்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெற்ற பிறகு வங்கி சேமிப்பு கணக்குகளில் 100 சதவீத டெபாசிட் (ரொக்க இருப்பு விகிதம்) அதிகரித்துள்ளது. வங்கிகளில் தேவையான பணம் கிடைக்கிறது. ஏடிஎம் மையங்களுக்கு கொண்டு செல்லுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார் உர்ஜித் படேல்.

தினசரி திரும்பப் பெறப்படும் பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் கண்காணிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் தேவைக்கேற்ப, கள்ள நோட்டு அச்சடிக்க முடியாத வகையில் 100 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

பண பரிமாற்றங்களில் பொதுமக்கள் டெபிட் கார்டுகள், ஆன்லைன், டிஜிட்டல் வாலட் போன்ற முறைகளை (ரொக்கம் இல்லாத) பரிவர்த்தனையை அதிகரிக்க தொடங்க வேண்டும். இதன் மூலம் பணப்பரிவர்த்தனைகள் எளிதாகவும், குறைந்த செலவிலும் நிகழும். இதனை எளிமையாக பயன்படுத்தும் விதமாக டெபிட் கார்டுகள், டிஜிட்டல் முறைகள் எளிதான முறைக்கு மாற்றம் செய்யப்படும். மக்கள் தொழில்நுட்பம் நிறைந்த ரொக்கமில்லா முறைக்கு மாறினால் நீண்ட காலத்தில் இந்தியா பல்வேறு வளர்ந்த நாடுகளுக்கு இணையாகவும், பொருளாதார சக்தியாக உருவாக முடியும்.  இதன் மூலம் பிற நாடுகளுடனான இந்தியாவின் உறவு பலப்படும் என்றார்.

வர்த்தகர்கள் தங்களது வர்த்தகத்தை டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுகள் மூலமாகவே தொடர தேவையான "ஸ்வைப்பிங் மெஷின்'களை வியாபாரிகளுக்கு அதிகஅளவில் வழங்குமாறு வங்கிகளுக்கு வலியுறுத்தி வருகிறோம்.

ரூபாய் நோட்டு விவகாரத்தில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலை குறித்த தகவல்கள் தினமும் வங்கிகளிடமிருந்து பெறப்பட்டு ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரங்களில் இருந்ததைவிட இப்போது வங்கி, ஏடிஎம் வாயில்களில் மக்கள் வரிசையில் காத்திருப்பது பெருமளவில் குறைந்துள்ளது. பொது சந்தைகள் எவ்வித பாதிக்கும் இன்றி செயல்பட்டு வருகின்றன. நூகர்பொருள்கள் விற்பனை குறைந்துள்ளதற்கான தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

புதிய ரூபாய் நோட்டுகள் அளவும், அடர்த்தியும் பழைய ரூபாய் நோட்டுக்களில் இருந்து மாறுபட்டுள்ளதால் இவற்றை கள்ள நோட்டாக அச்சடிக்க முடியாது.

புதிய ரூபாய் நோட்டுகளுக்கு ஏற்ப நாட்டில் உள்ள ஏடிஎம்கள் இயந்திரங்களை சீரமைக்கும் பணியில் 40 முதல் 50 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர். வங்கி கிளைகள் மற்றும் ஏடிஎம் இயந்திரங்களில் நாணயம் கிடைப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

பொதுமக்களின் சிரமத்தை போக்கும் விதமாக அனைத்து வங்கிகளின் ஊழியர்களும் மிகவும் கடினமாக உழைத்து வருகின்றனர். அவர்களுக்கு நாம் அனைவரும் நமது நன்றியை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.

புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணி முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்கு வழங்க போதுமான அளவு பணம் வங்கிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பணத்தை வங்கிகளுக்கும், ஏடிஎம் மையங்களுக்கும் எடுத்துச் செல்லும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நேர்மையான குடிமக்களுக்கு ஏற்பட்டுள்ள வலியை பிரச்னையைத் தீர்க்க தேவையான நடவடிக்கையை எடுக்க ரிசர்வ் வங்கி உறுதியாக உள்ளது என்றார் படேல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com