விவசாயிகள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே இந்தியா பலம் பெறும்: நரேந்திர மோடி

விவசாயிகள் மற்றும் கிராம மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்தால் மட்டுமே இந்தியா பலம் பெறும் என்றும் விவசாயிகளை நான் சாக
விவசாயிகள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே இந்தியா பலம் பெறும்: நரேந்திர மோடி

லக்னோ: விவசாயிகள் மற்றும் கிராம மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்தால் மட்டுமே இந்தியா பலம் பெறும் என்றும் விவசாயிகளை நான் சாக விடமாட்டேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்ட பாஜக, காசிப்பூர் நகரில் உள்ள ஐடிஐ வளாகத்தில் சுமார் 2 லட்சம் பேர் பங்கேற்ற பரிவர்த்தனை பிரச்சாரப் பேரணியை கடந்த 14-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.

இந்த பிரச்சாரப் பேரணியின் தொடர்ச்சியாக உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள குஷிநகரில் இன்று நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் இங்குள்ள வாரணாசி தொகுதியில் நான் போட்டியிட்டேன். அப்போது இந்த மாநிலத்தின் பல பகுதிகளில் சுற்றிவந்து தேர்தல் பிரசாரம் செய்தேன். இப்போது நான் பேசிக்கொண்டிருக்கும் இந்த இடத்தில் கூடியிருக்கும் மக்கள் கூட்டத்தின் பாதிகூட எனது மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது கூடவில்லை.

ஆனால், இப்போது பெண்கள் உள்பட ஏராளமான மக்கள் கூட்டம் என்னை ஆசீர்வதிக்க இங்கே திரண்டுள்ளது. என்மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு தலைவணங்குகிறேன்.

மத்தியில் அமைந்துள்ள தனது தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஏழைகள், விவசாயிகள், கிராமவாசிகள் மற்றும் தலித் மக்களின் உயர்வுக்காக அர்ப்பணிக்கப்பட்ட அரசாக பணியாற்றி வருவதாகவும், அவர்களுக்காக தன்னை அர்பணித்துள்ளதாகவும், உங்களுக்கு நான் துரோகம் செய்ய மாட்டேன் என்று மோடி உறுதியளித்தார்.

கரும்பு விவசாயிகளுக்கான பணத்தை இடைத்தரகர்களுக்கு இடமளிக்காமல் நேரடியாக அளிக்க நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். கரும்பு அறவை ஆலைகளை ’எத்தனால்’ தயாரிக்கும் இயந்திரங்களை அமைக்கும்படி வலியுறுத்தியுள்ளோம். இதன்மூலம், சர்க்கரையின் விலை வீழ்ச்சி அடையும்போது ’எத்தனால்’ தயாரித்து விவசாயிகள் பிழைக்க முடியும். கரும்பு விவசாயிகளை நான் சாக விடமாட்டேன் என்றார்.

ஆனால், உத்தரப்பிரதேசம் மாநில அரசு விவசாயிகளுக்கான மத்திய அரசின் திட்டம் எதையும் நடைமுறைப்படுத்தவில்லை. அந்த திட்டங்களை எல்லாம் மாநில அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்கான நிதியை அளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது.

சீர்திருத்தம் கொண்டு வரப்படும் போது விவசாயிகள் பாதிக்க கூடாது என்பதில் கவனமாக இருப்பதாகவும், விவசாயிகள் மற்றும் கிராம மக்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே இந்தியா பலம் பெறும் எனக் கூறினார்.

நாட்டு மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் நிலையில், கருப்புப் பணத்தை ஒழிக்கும் விதமாக உயர்மதிப்புடைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற்ற நடவடிக்கையால் பிரச்சனைகள் இருக்கும் என்று நான் ஏற்கனவே தெரிவித்திருந்திருந்தேன். அதற்காக உங்களிடம் 50 நாட்கள் அவகாசம் கேட்டிருந்தேன். இந்த 50 நாள் அவகாசம் இன்னும் 30 நாட்கள் மிச்சமுள்ள நிலையில் மக்களின் வேதனையை போக்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

ரூபாய் நோட்டு பிரச்சினையை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவித்த மோடி,  ஊழல் மற்றும் கருப்பு பணத்தை தடுப்பதற்கு நான் நடவடிக்கை எடுத்தால் சிலர் நாடு தழுவிய அளவில் ‘பாரத் பந்த்’ போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கிறார்கள்.

ஊழல் மற்றும் கருப்பு பணம் போன்றவை நாட்டை பாழாக்கி வருவதால், இந்தியாவை இதுபோன்ற தீங்கில் இருந்து விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட
வேண்டுமா? அல்லது, நாடு தழுவிய போராட்டம் நடத்தப்பட வேண்டுமா? என்று மக்களாகிய நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com