Enable Javscript for better performance
இரவில் கடும் பனிப்பொழிவு: ஏமாற்றும் வடகிழக்குப் பருவ மழை: கவலையில் விவசாயிகள்- Dinamani

சுடச்சுட

    

    இரவில் கடும் பனிப்பொழிவு: ஏமாற்றும் வடகிழக்குப் பருவ மழை: கவலையில் விவசாயிகள்

    By திருநெல்வேலி  |   Published on : 28th November 2016 07:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நிகழாண்டு வடகிழக்குப் பருவத்தில் வழக்கமான மழை அளவைவிட இதுவரை மிகக் குறைவாக பெய்துள்ளது. தொடர்ந்து மழை பெய்யாத சூழலில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது.

    தாமிரவருணி பாசனத்தில் சராசரியாக 1,083 மி.மீ. மழை கிடைத்து வந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இப்பாசனத்தில் 814.80 மி.மீ. மழை பெய்து வருகிறது. மழை குறைந்து வருவதாலும், பருவம் தவறி பெய்வதாலும் விளைபொருள்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

    2015 இல் வழக்கமான மழை அளவைவிட 74.4 சதவீதம் கூடுதலாக கிடைத்தது. வடகிழக்குப் பருவத்தில் 96 சதவீதம் கூடுதலாக மழை பெய்ததால் தாமிரவருணி நதியில் பெருவெள்ளம் ஏற்பட்டது. உபரிநீர் வீணாக கடலில் கலந்தது.

    நிகழாண்டு தென்மேற்கு பருவத்தில் முழுமையாக மழை பெய்யவில்லை. இதனால் எதிர்பார்த்தவாறு அணைகளில் நீர் இருப்பு இல்லை. இதனிடையே வடகிழக்குப் பருவ மழை தாமதமாக அக். 30 இல் தொடங்கிய போதிலும் தொடர்ந்து பெய்யாமல் இருந்து வருகிறது. நவ. 18 ஆம் தேதி வரை 348.45 மி.மீ. மழைதான் பதிவாகியுள்ளது.

    மழை இல்லாததால் அனைத்து குளங்களும் வறண்டுவிட்டன. மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு வெகுவாக குறைந்துள்ளது.

    கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் அணைகள் நிரம்பி உபரிநீர் தாமிரவருணியில் திறக்கப்பட்டது. தற்போது பிரதான அணைகளின் நீர்மட்டம் குறைவாக இருப்பதால் பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. வாங்கிய விதையை விதைக்க முடியாமல் மழையை எதிர்நோக்கி விவசாயிகள் காத்திருக்கின்றனர். மழை பெய்ய வேண்டிய இத்தருணத்தில் வழக்கத்துக்கு மாறாக இரவில் கடும் பனிப்பொழிவு இருப்பதால் பருவ மழை பொய்த்து விடுமோ என விவசாயிகளிடையே அச்சம் எழுந்துள்ளது.

    நீர்மட்டம்: பாபநாசம் அணை 34.60 அடி, சேர்வலாறு அணை 50 அடி, மணிமுத்தாறு அணை 35.45 அடி, கடனாநதி அணை 49.70 அடி, ராமநதி அணை 42.50 அடி, கருப்பாநதி அணை 39.43 அடி, குண்டாறு அணை 23.38 அடி, அடவிநயினார் அணை 64.75 அடி, வடக்குப்பச்சையாறு அணை 3.25 அடி, நம்பியாறு அணை 10.10 அடி, கொடுமுடியாறு அணை 7 அடி.

    பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 184.35 கனஅடி, மணிமுத்தாறு அணைக்கு 19 கனஅடி, கடனாநதி அணைக்கு 8 கனஅடியும் நீர்வரத்து இருந்தது. பிற அணைகளுக்கு நீர்வரத்து இல்லை. குடிநீர் தேவைக்காக பாபநாசம் அணையில் இருந்து 131 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai