Enable Javscript for better performance
சேலம் உருக்காலை பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு- Dinamani

சுடச்சுட

    

    புது தில்லி, 

    சேலம் உருக்காலை நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வரும் நிலையில், அதன் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான தகவலை மத்திய உருக்காலைத் துறை இணையமைச்சர் விஷ்ணு தேவ் சாய் மக்களவையில் திங்கள்கிழமை தெரிவித்தார்.

    சேலம் உருக்காலை நிறுவனத்தில் ஆண்டொன்றுக்கு 4.4 லட்சம் டன் அளவுக்கு உருக்கு உற்பத்தி நடைபெறுகிறது. இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக இந்நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருவதாகத் தெரிகிறது. 

    பொதுத் துறை நிறுவனங்களின் குறிப்பிட்ட சதவீதப் பங்குகளை விற்பனை செய்து, அதன் வாயிலாக வருவாயைத் திரட்டுவது மத்திய அரசின் கொள்கை சார்ந்த நடவடிக்கைகளில் ஒன்று. அதன் அடிப்படையில், சேலம் உருக்காலை நிறுவனத்தின் பங்குகளையும் விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

    இதுதொடர்பாக மக்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய இணையமைச்சர் விஷ்ணு தேவ் சாய், எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்: இந்திய உருக்காலை ஆணையத்தின் (செய்ல்) கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் நிறுவனங்களில் சேலம் உருக்காலையும் ஒன்று. இந்நிறுவனத்தை நவீனமயமாக்கவும், தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தவும் "செய்ல்' சார்பில் ரூ.2,200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இருந்தபோதிலும், கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து நஷ்டத்திலேயே சேலம் உருக்காலை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதையடுத்து, அதன் பங்குகளில் குறிப்பிட்ட சதவீதத்தை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதனிடையே, இந்தியா - சீனா இடையேயான வர்த்தகம் தொடர்பாக எழுப்பப்பட்ட மற்றொரு கேள்விக்கு மத்திய வர்த்தகம் - தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்ததாவது:

    நம் நாட்டிலிருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அளவு குறைந்து வருகிறது. அதேவேளையில், அங்கிருந்து இறக்குமதி செய்வது அதிகரித்திருக்கிறது. இந்த வர்த்தகப் பற்றாக்குறையானது கடந்த நிதியாண்டில் 5,269 கோடி டாலர்களாக (இந்திய மதிப்பில் சுமார் ரூ.3.5 லட்சம் கோடி) உள்ளது. இது அதற்கு முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 400 கோடி டாலர்கள் (சுமார் ரூ.24,000 கோடி) அதிகமாகும் என்று அவரது பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai