Enable Javscript for better performance
தஞ்சை பெரிய கோவிலில் மாயமான ராஜராஜசோழனின் தங்க சிலைகள்: மீட்கக்கோரிய மனு தள்ளுபடி- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சை பெரிய கோவிலில் மாயமான ராஜராஜசோழனின் தங்க சிலைகள்:  மீட்கக்கோரிய மனு தள்ளுபடி

    By DIN  |   Published on : 28th November 2016 08:30 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னை, 

    தஞ்சை பெரிய கோவிலில் இருந்து மாயமான ராஜ ராஜ சோழன், அவது மனைவியின் தங்க சிலையை மீட்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், விலை மதிக்க முடியாத சிலைகள் திருடப்பட்டு வெளி மாநிலங்களில் இருந்தால் அவற்றை மீட்டுக் கொண்டு வருவது அரசின் கடமையாகும் என்று தெரிவித்துள்ளது.

    சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் முன்னாள் அமைச்சர் வி.வி.சுவாமிநாதன் தாக்கல் செய்த பொது நல மனு விவரம்: தஞ்சையை தலைநகரமாகக் கொண்டு தென்னிந்தியா முழுவதும் ஆட்சி புரிந்தவர் ராஜ ராஜ சோழன். இவர் தஞ்சைப் பெரிய கோயில் அல்லது தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அறியப்படும் மிகப்பெரிய சிவன் கோவில் ஒன்றை கட்டினார்.

    கடந்த 1010-ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு, குட முழுக்கு நடைபெற்றது. அப்போது, அந்தக் கோவிலில் ராஜ ராஜ சோழன், அவரது மனைவி லோகமா தேவியின் உருவம் பொறிக்கப்பட்ட சிலைகள் நிறுவப்பட்டன.

    காஞ்சி சங்கர மடத்தின் தலைவர் மறைந்த சங்கராச்சாரியரின் கூற்றுபடி, இந்த இரு சிலைகளும் தங்கத்தால் செய்யப்பட்டவை என்று கூறப்படுகிறது. இந்த இரு சிலைகளும், கடந்த 1,900-ஆம் ஆண்டு வரை கோயிலில் இருந்தன. அதன் பின்னர், விலை மதிப்பு மிக்க அந்த சிலைகள் மாயமாகின. மாறாக, வேறு சிலைகள் அங்கு நிறுவப்பட்டுள்ளன.

    இந்த விஷயம் பல ஆண்டுகளாக வெளிச்சத்துக்கு வரவில்லை. முதல்வராக எம்.ஜி.ஆர். இருந்த போது, கடந்த 1984-ஆம் ஆண்டு ராஜ ராஜ சோழனுக்கு ஆயிரமாவது முடிசூட்டு விழா (Coronation day) கொண்டாடப்பட்டது. அந்த விழாவுக்கு பிரதமர் இந்திரா காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும் விழாவில் மறைந்த சங்கராச்சாரியார் வைரத்தால் ஆன கிரீடத்தைச் சிலைகளுக்கு நன்கொடையாக வழங்கினார்.

    அப்போது புகழ்பெற்ற தொல்லியல் ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன், தற்போதுள்ள சிலைகள் உண்மையானவை அல்ல என்ற விஷயத்தை எழுப்பி, உண்மையான சிலைகளை கண்டுபிடித்து கொண்டு வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

    இதையடுத்து முதல்வரும், பிரதமரும் சிலைகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தனர். அதைத் தொடர்ந்து, எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பின்னர் சிலைகள் ஆமதாபாத்தில் உள்ள தனியார் அருங்காட்சியத்தில் இரு சிலைகளும் இருப்பதாக தமிழ் நாளிதழில் செய்தி வெளியானது.

    இதைத் தொடர்ந்து, திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுவானது, குஜராத் மாநிலம் சென்று அப்போதைய முதல்வர், அருங்காட்சிய தலைவரையும் சந்தித்து சிலைகளை திரும்பக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை எடுத்தது.

    அப்போது குழுவில் இடம்பெற்ற உறுப்பினரான தொல்லியல் துறை இயக்குநர் நாகசாமி, உண்மையான சிலை தான் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. அதன் பின்னர் எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை. எனவே, இந்த பழமையான தங்கச்சிலையை மீட்டுக் கொண்டு வர தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு, பழங்காலத்து விலை மதிக்க முடியாத சிலைகள் வெளி மாநிலத்தில் இருந்தால், அவற்றை மீட்டுக் கொண்டு வருவது தமிழக அரசின் கடமை.

    மனுதாரர் தமிழக அரசை மீண்டும் அணுகி, இந்த கோரிக்கையை முன் வைக்க வேண்டும். எனவே, இந்த வழக்கை பொதுநல வழக்காக கருத முடியாது. அதனால், வழக்கை தள்ளுபடி செய்கிறோம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai