Enable Javscript for better performance
மத்திய அரசினால் தொடுக்கப்பட்டுள்ள போர் தான் ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாடு: மு.க.ஸ்டாலின்- Dinamani

சுடச்சுட

    

    மத்திய அரசினால் தொடுக்கப்பட்டுள்ள போர் தான் ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாடு: மு.க.ஸ்டாலின் 

    By DIN  |   Published on : 28th November 2016 01:23 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    MKS_Protest

    மத்திய அரசினால் தொடுக்கப்பட்டுள்ள போர் தான் ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாடு என்று தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து, பணத்தட்டுப்பாட்டை தடுக்கத் தவறிய மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைக்கு எதிராக, இன்று (28-11-2016) சென்னை, ராஜாஜி சாலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி தலைமை அலுவலகம் முன்பு தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவின் சார்பில், மாபெரும் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் கழகத் தொண்டர்கள் பங்கேற்று, மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். அப்போது பேசிய ஸ்டாலின்

    கடந்த நவம்பர் 8-ஆம் தேதி பாரத பிரதமர் மோடி திடீரென்று யாரும் எதிர்பாராத சூழ்நிலையில் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பு வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான். அதை வரவேற்கிறோம் என்று தலைவர் கருணாநிதி அதை தொடக்கத்திலேயே எடுத்துச் சொல்லி, ஆனால் வரவேற்கக் கூடிய அதேநேரத்தில், அதை நடைமுறைப்படுத்தும் நேரத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்கள், குளறுபடிகள், அதனால் ஏழை, எளிய மக்கள், நடுத்தர மக்கள், சிறு வணிகர்கள் என்று பலதரப்பட்ட மக்கள் எந்தளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டி, அதை உடனடியாக இந்த அரசு சரி செய்திட வேண்டும் என்று நம்முடைய தலைவர் கருணாநிதி தன்னுடைய செய்தியில் மிக விளக்கமாக சுட்டிக்காட்டி இருக்கிறார்.

    ஆக, நவம்பர் 8 என்பதை சுனாமி ஏற்பட்ட நாளாகத்தான் இன்றைக்கு மக்கள் கருதிக் கொண்டு இருக்கிறார்கள். 20 நாட்கள் ஓடிவிட்டன. ஆக, இதை அறிவித்து, மக்களுக்கு செய்தி சொல்லுகின்ற நேரத்தில் பிரதமர் மோடி, அதைத் தொடர்ந்து மத்தியில் இருக்கக் கூடிய சில அமைச்சர்கள் குறிப்பிட்டு சொன்னார்கள், மூன்று நாட்களில் அனைத்தும் சரியாகி விடும், ஒரு வார காலத்தில் முழுமைப் பெற்றுவிடும், பத்து நாட்களுக்குள் நாங்கள் சரி செய்துவிடுவோம் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டு இருந்தார்கள். ஆனால், திடீரென்று நான்கைந்து நாட்களுக்குள் அதே மோடியும், மத்திய அமைச்சர்களும் என்ன சொல்கிறார்கள் என்றால், 50 நாட்களுக்குள் நாங்கள் சரி செய்து விடுகிறோம் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். ஆக, 20 நாட்களாக 2 நாட்கள், 3 நாட்கள், 5 நாட்கள், ஒரு வார காலம், 10 நாட்கள், 50 நாட்கள் என்று அறிவித்துக் கொண்டிருக்கிறார்களே தவிர, அதற்கான முயற்சியில் மத்திய அரசு தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளவில்லை என்பதை இன்றைக்கு மக்கள் தெளிவாகப் புரிந்து கொண்டு இருக்கிறார்கள்.

    சிறு வியாபாரிகள், வணிகர்கள், பூ விற்கக் கூடியவர்கள், தெருவோரத்தில் வியாபாரம் செய்து கொண்டிருக்கும் தோழர்கள், விவசாயப் பெருங்குடி மக்கள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள், மீனவர்கள், பெட்டிக்கடை வைத்துக் கொண்டிருக்கக் கூடியவர்கள், வளையல் கடை வைத்து தங்களுடைய பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கக் கூடியவர்கள் என்று பலதரப்பட்ட மக்கள் சொல்ல முடியாத துன்பத்திற்கும் துயரத்திற்கும் ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள். மளிகைக்கடைகளுக்கு சென்றால் அங்கே பொருட்களை உடனடியாக வாங்க முடிகிறதா என்றால், வாங்கவும் முடியவில்லை, அந்த பொருளை விற்கக் கூடிவர்களும் விற்க முடியாத நிலையில் இருக்கிறார்கள். மளிகைப் பொருட்களாக இருந்தாலும் சரி, காய்கறிகளாக இருந்தாலும், பாலாக, மருந்தாக இருந்தாலும் இன்றைக்கு இந்த நிலை இருந்து கொண்டிருக்கிறது.

    வீட்டு வாடகையை குறித்த நேரத்தில் தரவில்லை என்று சொன்னால் என்ன கொடுமைக்கு எந்த வீட்டில் இருப்பவர்கள் ஆளாக்கப் படுகிறார்கள். அதேபோல நீங்கள் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று சொன்னால், வங்கிகளின் வாசலில் ஆயிரக்கணக்கில் க்யூவில் நின்று கொண்டிருக்கக் கூடிய கொடுமை. இதே பாரத பிரதமர் மோடி தேர்தல் நேரத்தில் சொன்னது, அல்லது தேர்தல் முடிந்து வெற்றிப் பெற்று ஆட்சிப் பொறுப்பேற்று சொன்னது, ‘மக்கள் என் பக்கம்’ என்று சொன்னார். ஆனால், மக்கள் மோடி பக்கம் இருக்கிறார்களோ இல்லையோ வங்கிகளின் பக்கம் இன்றைக்கு நின்று கொண்டிருக்கும் கொடுமை நாட்டிலே உருவாகியிருக்கிறது.

    நான் இன்னொரு விளக்கத்தை இந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியில் பதிவு செய்வதை கடமையாக கருதுகிறேன். டிசம்பர் 1-ஆம் தேதி பிறக்கப் போகிறது. ஆக, 1-ஆம் தேதி பிறந்த பிறகு அரசு அலுவலகங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கக் கூடியவர்கள், அது மத்திய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும், அதேபோல் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து கொண்டிருப்பவர்களுக்கு எல்லாம் மாத ஊதியத்தை வழங்கிட வேண்டும். இன்றைக்கு மத்திய அரசை பொறுத்தவரையில் 46 லட்சம் பேர் ஊழியர்களாக இருக்கிறார்கள். அதிலே பென்ஷன் வாங்கக் கூடியவர்கள் 55 லட்சம் பேர் இருக்கிறார்கள். தனியார் ஊழியர்களும் இருக்கிறார்கள். இந்த தமிழகத்தை எடுத்துக் கொண்டால் 13 லட்சம் பேர் அரசு ஊழியர்கள் இருக்கிறார்கள். அதிலே ஓய்வூதியம் பெறக்கூடிய அரசு ஊழியர்கள் எவ்வளவு என்று கேட்டால் 7 லட்சம் பேர். இவர்கள் அனைவருக்கும் 1-ஆம் தேதி சம்பளத்தை வழங்கிட வேண்டும். அவர்கள் சொல்லலாம், சம்பளம் அவர்களின் வங்கிக் கணக்கிலே அது சேர்ந்து விடுகிறது என்று சொல்லலாம். நான் ஏற்றுக் கொள்கிறேன்.

    ஆனால், அதேநேரத்தில் ஒரு நாளைக்கு அவர்கள் வங்கிக்கு செல்கிறபோது 2500 ரூபாய்தான் எடுக்க முடியும் என்ற நிலை இன்றைக்கு உருவாகியிருக்கிறது. நான் கேட்கிறேன் வாடைகைக்கு செக் கொடுக்கா முடியுமா ? அதேபோல் பால் வாங்குகிற நேரத்தில் அவர்களுக்கு செக் தரமுடியுமா ? காய்கறி வாங்க போகிறோம், அங்கே போய் செக்கா கொடுத்துக் கொண்டிருகிறோம் ? அதேபோல பள்ளி கட்டணங்களாக இருந்தாலும் சரி, இதற்கெல்லாம் நாம் செக் கொடுப்பது இல்லை. ஆக அந்தநிலை இன்றைக்கு மக்களிடத்தில் ஏற்பட்டிருக்கிறது.

    ஆக, இந்த கருப்பு பண ஒழிப்பை பொறுத்தவரையில் அதை மனதார திமுக வரவேற்கிறது. அதில் எந்த மாற்றமும் கிடையாது. இதே மோடி தேர்தல் நேரத்தில் எத்தனையோ உறுதிமொழிகளை, வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறார். அதிலே ஒரு உறுதிமொழி, ”நான் ஆட்சிக்கு வந்தால், நான் பிரதமராக பொறுப்பேற்றால் கறுப்பு பணத்தை ஒழிப்பேன், வெளிநாடுகளில் இருக்கக்கூடிய கறுப்பு பணத்தை, சுவிஸ் வங்கிகள் போன்ற பல வெளிநாடுகளில் இருக்கக்கூடிய வங்கிகளில் இருக்கக்கூடிய கறுப்பு பணத்தையெல்லாம் கைப்பற்றி இந்தியாவுக்கு நான் கொண்டு வருவேன். கொண்டு வருவது மட்டுமல்ல கொண்டு வரும் அந்த பணத்தை பயன்படுத்தி இந்திய நாட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொருவருக்கும், அவர்களது வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்வேன் என்று உறுதிமொழி கொடுத்தார்.

    நான் கேட்கிறேன், இந்தியாவில் உள்ள ஒருவருக்காவது, அவர் வெளிநாடுகளில் இருந்து கறுப்பு பணத்தை மீட்டு, அந்த கறுப்பு பணத்தை பயன்படுத்தி, 15 லட்ச ரூபாய் டெபாசிட் யாருக்காவது வழங்கப்பட்டு இருக்கிறதா ? 15 லட்சம் வேண்டாம், 15000 ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டதா ? 15000 கூடத் தேவையில்லை, அட்லீஸ்ட் ஒரு 15 ரூபாய் வழங்கப்பட்டு இருக்கிறதா என்றால் இல்லை.

    திருவல்லிக்கேணியை சேர்ந்த கலாவதி என்பவர் சொல்கிறார், ”கணவனை இழந்து தனிமையில் வாடிக் கொண்டிருக்கிறேன். 5000 ரூபாயை எடுப்பதற்கு 5 நாட்களாக நான் அலைந்து கொண்டு இருக்கிறேன். டாக்டரிடம் போவதற்கு கூட என்னிடத்தில் பணமில்லை”, என்று அந்த பெண்மணி சொல்லி இருக்கின்றார்.

    அதேபோல தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்து கொண்டு இருக்கக் கூடிய ராமராஜ் என்ற ஒரு தோழர், ”என் மனைவி கர்ப்பமாக இருக்கின்றார். அவரை மருத்துவமனைக்கு அழைத்து போக முடியவில்லை. பணம் எடுப்பதற்கு தினமும் 5 முதல் 6 மணி நேரம் காத்திருந்து, கவுண்டரிடம் போகும்போது, பணம் தீர்ந்து விட்டது என்று சொல்கிறார்கள். பணமில்லாததால் என்னுடைய கர்ப்பிணி மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை”, என்று தனது வேதனையை பத்திரிகையில் குறிப்பிட்டுக் காட்டி இருக்கின்றார்.

    அதுமட்டுமல்ல, வங்கியில் பணிபுரிந்து கொண்டிருக்கக் கூடிய ரம்யா என்ற ஒரு பெண் ஊழியர், “என் அண்ணனின் நண்பருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. அவரை மருத்துவமனையில் அனுமதிக்க முயன்ற போது கார்டை ஏற்க மறுத்து, பணமாக கட்ட வேண்டுமென்று கூறி விட்டார்கள். அதனால் மன உளைச்சலில் இருக்கிறேன்”, என்று கண்ணீர் மல்க கூறியிருக்கிறார்.

    ஆக, இப்படி பல செய்திகள். சினிமா தொழில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. சிறு-குறு தொழில் நிறுவனங்கள் இன்றைக்கு சிக்கலில் தவித்துக் கொண்டு இருக்கின்றன. விவசாயிகள் – விவசாயத் தொழிலாளர்கள் இன்றைக்கு கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். நெசவாளர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். சிறு வணிகர்கள் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். தெருவோரங்களில் கடைகள் வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தவர்கள் இன்றைக்கு அல்லலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். ஆக, இப்படிப்பட்ட கொடுமைகள் கடந்த 20 நாட்களாக தமிழகத்தில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிலும் ஏற்பட்டு இருக்கிறது.

    ஆகவே, நான் குறிப்பிட விரும்புவது, இந்தியா என்பது ஒரு ஜனநாயக நாடு. இங்கு 85 கோடி பேருக்கு மேலான மக்கள் கிராமங்களில் வசித்து வருகின்றனர். அவர்களில் மெஜாரிட்டியான மக்களிடம் கணக்கெடுத்துப் பார்த்தால், அவர்களுக்கு வங்கிகளில் கணக்குகள் கிடையாது. பல கிராமங்களில் இருக்கும் மக்களுக்கு காசோலை என்றால், செக் என்றால் என்னவென்றே தெரியாது. கூலித் தொழிலாளிக்கு டெபிட் கார்ட் என்றால் என்ன என்பது தெரியுமா ? ஆக, இப்படிப்பட்ட நிலையில் தான் பெரும்பாலான கிராம மக்கள் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.

    ஆனால் இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் மத்தியில் ஆட்சியில் இருக்கக்கூடியவர்கள், 50 நாட்களுக்கு பொறுத்துக் கொள்ளுங்கள் என்று அலட்சியமாக தொடர்ந்து சொல்லிக் கொண்டு இருக்கிறார்களே, அவர்களைப் பார்த்து நான் கேட்கிறேன், வளர்ச்சி என்ற கோஷத்தை வைத்து வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு, திடீரென்று இப்படி ஒரு அறிவித்து, இன்றைக்கு 20 நாட்களாக அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி முடங்கி போயிருக்கிறதே, இந்தியாவின் முதுகெலும்பாக விளங்கிக் கொண்டிருக்கக் கூடிய சுமார் 85 கோடி மக்கள் இருக்கின்றார்கள் என்று சொன்னால், அவர்கள் மீது இன்றைக்கு மத்திய அரசின் சார்பில் தொடுக்கப்பட்டுள்ள போர்தான், மோடியின் இந்த அறிவிப்பு என்பதை நான் இங்கு அழுத்தம், திருத்தமாக பதிவு செய்து, ஆக, அப்படிப்பட்டவர்கள் உடனடியாக தங்களுடைய தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும்.

    கறுப்பு பணத்தை ஒழிப்பது தவறென்று நாங்கள் வாதிடவில்லை. அப்படி செய்கின்ற நேரத்தில் இருக்கின்ற பல பிரச்னைகளை உடனடியாக சரி செய்திட வேண்டும், இல்லையென்று சொன்னால், இப்போது நடத்தக்கூடிய இந்த போராட்டம், முடிகின்ற போராட்டமாக அல்ல தொடர்கின்ற போராட்டமாக, தொடர்ந்து நடைபெறும். அப்படியொரு நிலையை மத்திய அரசு நிச்சயமாக உருவாக்காது என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. அந்த நம்பிக்கை இருக்கின்ற காரணத்தால் தான் இந்த அளவோடு எங்கள் போராட்டங்களை நாங்கள் நடத்திக் கொண்டு இருக்கின்றோம். எங்கள் நம்பிக்கைக்கு விரோதமாக, எதிராக மத்திய அரசு இருக்காது என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. அதை நீங்கள் உணர்ந்து இருக்கின்ற பிரச்னைகளுக்கு உடனடியாக பரிகாரம் காணக்கூடிய வகையில், மத்திய அரசின் முழுக் கவனமும் இருந்திட வேண்டுமென்ற என்னுடைய வேண்டுகோளை அழுத்தம் திருத்தமாக இந்த பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தின் மூலமாக நான் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உட்பட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai