Enable Javscript for better performance
ரிஷிவந்தியம் அருகே பூட்டப்பட்ட ஆலயம்: தரிசனத்துக்கு பக்தர்கள் தவிப்பு!- Dinamani

சுடச்சுட

    

    ரிஷிவந்தியம் அருகே பூட்டப்பட்ட ஆலயம்: தரிசனத்துக்கு பக்தர்கள் தவிப்பு!

    By DIN  |   Published on : 08th October 2016 12:06 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருக்கோவிலூர், 
    ரிஷிவந்தியம் அருகே வைணவ ஆலயக் கதவு பூட்டப்பட்டிருந்ததால் தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் சனிக்கிழமை பரிதவித்தனர்.

     புரட்டாசி மாதத்தில் பெருமாள் வழிபாடு நாடெங்கிலும் உள்ள சிறுசிறு வைணவ ஆலயங்களில் எல்லாம் வெகு சிறப்பாக நடத்தப்படுவது வழக்கம். 

     குறிப்பாக, புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் அனைத்து வைணவ ஆலயங்களிலும் கால அட்டவணை வரம்பின்றி, நாள் முழுவதும் நடைத் திறப்பு செய்யப்பட்டு, பக்தர்களுக்கு சாமி தரிசனம் இடைவிடாமல் கிடைக்க வாய்ப்பளிக்கப்படுவது உண்டு. 

     ஆனால், ரிஷிவந்தியம் ஒன்றியத்துக்கு உள்பட்ட மையனூர் வனப்பகுதியில், கெடிலம் நதி முகத்துவாரத்தில் அமைந்துள்ள வைகுந்தவாசப் பெருமாள் ஆலயம் சனிக்கிழமை (அக்.8) முற்பகல் 11 மணி வரை நடைத் திறப்பு செய்யப்படாமல் பூட்டியே கிடந்தது. 

     இங்கு வந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். பூட்டிக்கிடந்த ஆலயத்தின் வெளியில் இருந்து, மானசீகமாக பெருமாளை வணங்கி மன ஆறுதல் அடைந்தனர். 

     நூற்றுக்கும் மேற்பட்ட படிகளுடன், சிறு குன்றின் உச்சியில் வெகு சிறப்பாக கட்டப்பட்டுள்ள பெருமாள் சன்னதிக்கு, மெய்வருத்தம் பாராமல் ஏறிவந்தும், தரிசனம் செய்ய முடியாமல் அவர்கள் வேதனையுடன் திரும்பினர். சிலர் மணிக்கணக்கில் காத்திருந்து மனச் சலிப்புடன் கிளம்பிச் சென்றனர்.  

     புரட்டாசி மாதத்தில் மட்டுமல்ல, வருடம் முழுவதுமே இவ்வாலயத்தை சரிவர திறக்காமல் பூட்டியே வைத்து, பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்களை சாமி தரிசனம் காண முடியாமல் ஏமாற்றத்தில் ஆழ்த்தி வருகின்றனர். 

     மிகுந்த பொருட்செலவில் கட்டப்பட்டும், வைணவ பெருமக்களுக்கு வைகுந்த வாசப் பெருமாளின் அருள்பாலிப்பு கிடைத்திடும் வகையில், குறித்த காலத்தில் பூஜைகள் நடத்தப்படுவதில்லை என்று பக்தர்கள் மிகுந்த கவலை தெரிவிக்கின்றனர். 

     ஆலய திறப்பு நேரம் மற்றும் விசேஷ வழிபாடு விவரங்கள், நிர்வாகிகளின் செல்லிடப்பேசி எண்கள் குறித்த அறிவிப்புப் பலகை ஆலய முகப்பில் வைக்கப்படுவது, பெருமாளை தரிசிக்க வருபவர்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பு.  

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai