Enable Javscript for better performance
வடகிழக்கு பருவமழை ஆளுநர் முன்னிலையில் பேரிடர் பாதுகாப்பு ஒத்திகை- Dinamani

சுடச்சுட

    

    வடகிழக்கு பருவமழை ஆளுநர் முன்னிலையில் பேரிடர் பாதுகாப்பு ஒத்திகை

    By DIN  |   Published on : 08th October 2016 03:40 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி,

    புதுவையில் வடகிழக்கு பருவமழையின் போது அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கும் வகையில் பேரிடர் பாதுகாப்பு ஒத்திகை சனிக்கிழமை நடத்தப்பட்டது.

    புதுச்சேரியில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி வெள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பல இடங்களில் வெள்ளநீர் வெளியேறாததால் அரசு சார்பில் உணவு வழங்கப்பட்டது.

     இந்த நிலையில் இந்த ஆண்டு பருவமழையின் போது பாதிப்பு ஏற்படாதவாறு மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி மழைநீர் தேங்கும் இடங்கள், மோட்டார் பம்புகள் வைக்க வேண்டிய இடங்கள், உணவு தயாரிக்கும் இடம், பாதுகாப்பு மையங்கள் வரும் இடங்கள் ஆகியவற்றை கண்டறிந்து திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பேரிடர் மீட்பு குழுவினர் எச்சரிக்கையுடன் இருக்கவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பேரிடர் பாதுகாப்பு ஒத்திகை சனிக்கிழமை காலை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நோணாங்குப்பம் புதுநகர் மற்றும் கிருமாம்பாக்கம் பகுதிகளில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

     நோணாங்குப்பம் புதுநகரில் தற்காலிகமாக குடிசை அமைக்கப்பட்டு, தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் ஒத்திகை நடத்தப்பட்டது. மேலும் தீ விபத்தில் பாதிக்கப்படுவோருக்கு முதலுதவி அளிக்கவும் பயிற்சி செய்யப்பட்டது. இது போன்ற ஒத்திகை கரிக்கலாம்பாக்கம் பகுதியிலும் செய்து பார்க்கப்பட்டது.

     இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, மின்துறை, பொதுப்பணித்துறை, வனத்துறை, சுகாதாரத்துறை, குடிமைப்பொருள் வழங்கல் துறை, சமூக நலத்துறை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

    இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பார்வையிட்டார். உடன் மாவட்ட ஆட்சியர் சத்யேந்திரசிங் துர்சாவாத் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai