முன்னாள் அமைச்சர் ராஜவேலு உறவினர் வீட்டில் வெடிகுண்டு வீசிய வழக்கு4 பேர் கைது

புதுவையில் முன்னாள் அமைச்சர் ராஜவேலுவின் உறவினர் வீட்டில் வெடிகுண்டு வீசிய சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீஸôர் கைது செய்துள்ளனர்.

புதுச்சேரி,

புதுவையில் முன்னாள் அமைச்சர் ராஜவேலுவின் உறவினர் வீட்டில் வெடிகுண்டு வீசிய சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீஸôர் கைது செய்துள்ளனர்.

இது குறித்து காவல்துறை முதுநிலை எஸ்.பி. ராஜீவ் ரஞ்சன் கூறியது: புதுவையில் அமைச்சராக இருந்தவர் ராஜவேலு. இவரது அண்ணன் உத்தரவேலுவின் மகள் பிரேமலட்சுமி. இவர் முதலியார்பேட்டை நயினார்மண்டபம் சுதானா நகரில் உள்ள வீட்டில் தனது தாய் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். பிரேமலட்சுமியின் அண்ணன் லட்சுமிகாந்தன் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டவர்.

 இந்த நிலையில் கடந்த சனிக்கிழமையன்று நள்ளிரவு பிரேமலட்சுமி மற்றும் குடும்பத்தினர் வீட்டில் இருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் வீட்டின் மீது வெடிகுண்டு வீசிவிட்டு தப்பினர். இந்த குண்டு வீச்சில் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் கார் கண்ணாடிகள் உடைந்தன.

 இந்த சம்பவம் குறித்து முதலியார்பேட்டை போலீஸர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் வெடிகுண்டு வீசியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடம் செவ்வாய்க்கிழமை மனு ராஜவேலு அளித்தார்.

 4 பேர் கைது: இந்த சம்பவம் குறித்து விசாரிக்க எஸ்.பி. அப்துல் ரஹீம் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படையினர் புதுவையில் இதற்கு முன்னர் நடைபெற்ற வெடிகுண்டு வீச்சு சம்பவங்களுடன் இந்த சம்பவத்தையும் ஒப்பிட்டு பார்த்தனர். இதனையடுத்து அந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்களை போலீஸôர் கண்காணித்தனர்.
 இந்த விசாரணையின் முடிவில் புதுவை வானரப்பேட்டையை சேர்ந்த குமார் என்கிற சனிக்குமாரை (37) போலீஸôர் கைது செய்து விசாரித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பிரேமலட்சுமியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் முன்னாள் கவுன்சிலர் சத்யராஜ் என்பவரிடம் பணம் பறிக்கும் நோக்கில் வெடிகுண்டு வீச முயற்சி செய்ததும், பிரேமலட்சுமியின் வீட்டை சத்யராஜ் வீடு என்ற குழப்பத்தில் மாற்றி குண்டு வீசியதும் தெரியவந்தது.

இதனையடுத்து அவரை கைது செய்த போலீஸர், அவர் கொடுத்த தகவலின்பேரில் கிருஷ்ணா நகர் கிறிஸ்டோபர் (42), அரியாங்குப்பம் ஸ்ரீதர் என்கிற ஸ்ரீகாந்த் (39), லாஸ்பேட்டையை சேர்ந்த சுந்தர் (30) ஆகியோரை புதன்கிழமை கைது செய்தனர். இதில் சனிக்குமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று முன்கூட்டியே சிறையில் இருந்து விடுதலையானவர். தற்போது அவர் வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். மேலும் மற்ற 3 பேர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன.

 வெடிகுண்டு கிடைத்தது எப்படி? சனிக்குமார் வானரபேட்டை பகுதியில் வீடு கட்டி வருகிறார். அதற்கு பணம் தேவைப்பட்டதால் ஸ்ரீதரிடம் கேட்டுள்ளார். அதற்கு முன்னாள் கவுன்சிலர் சத்யராஜ் என்பவர் கட்டுமான நிறுவனத்திடம் ரூ. 25 லட்சம் வாங்கியுள்ளதாகவும், சத்யராஜை பயமுறுத்தி ரூ. 10 லட்சம் வாங்கலாம் என்றும் ஸ்ரீதர் கூறியுள்ளார்.
 இதனை ஏற்றுக் கொண்ட சனிக்குமார் தன்னிடம் இருந்த 5 வெடி குண்டுகளில் ஒன்றை சத்யராஜ் வீட்டின் மீது வீச திட்டமிட்டு, கிறிஸ்டோபருடன் இருசக்கர வாகனத்தில் சென்று பிரேமலட்சுமி வீட்டின் மீது வீசியுள்ளார்.
 கடந்த 7 மாதங்களுக்கு முன்பு லாஸ்பேட்டையை சேர்ந்த சுந்தர் மடுவுப்பேட் பகுதியை சேர்ந்த மற்றொரு சுந்தர் என்பவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதற்காக தமிழகத்தில் இருந்து அதிக அளவில் பட்டாசுகளை வாங்கி அதில் இருந்து மருந்து எடுத்து சனிக்குமாருடன் சேர்ந்து 8 நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்துள்ளார்.
 நாளடைவில் லாஸ்பேட்டை சுந்தருக்கும் மடுவுப்பேட் சுந்தருக்கும் பிரச்னை தீர்ந்ததால், வெடிகுண்டுகள் அப்படியே இருந்துள்ளன. அதனை எடுத்து தற்போது பயன்படுத்தியுள்ளனர். கடந்த மார்ச் மாதம் வானரப்பேட்டையை சேர்ந்த பழனி என்பவர் வீட்டிலும், ஏப்ரல் மாதத்தில் முதலியார்பேட்டை காவல்நிலையம் மீதும் சனிக்குமார், கிறிஸ்டோபர் ஆகியோர் வெடிகுண்டுகளை வீசியுள்ளனர். மேலும் கோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்த கமலா என்பவர் வீட்டின் மீதும் வெடிகுண்டு வீசியுள்ளனர்.
 விசாரணையின் முடிவில் 4 பேரையும் கைது செய்த போலீஸôர், மீதமுள்ள வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் இவர்கள் வேறு யாரிடமாவது மிரட்டி பணம் பறித்துள்ளனரா என்பது குறித்தும் போலீஸôர் விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com