Enable Javscript for better performance
இலங்கை பிடியில் உள்ள 115 படகுகள், மீனவர்களை விடுவிக்க வேண்டும்மீனவர் பேரவை இளங்கோ- Dinamani

சுடச்சுட

    

    இலங்கை பிடியில் உள்ள 115 படகுகள், மீனவர்களை விடுவிக்க வேண்டும் மீனவர் பேரவை இளங்கோ

    By DIN  |   Published on : 15th October 2016 05:14 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி, 

    இலங்கையின் பிடியில் உள்ள தமிழக, புதுவை மீனவர்களின் 115 படகுகள் மற்றும் 5 தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று தேசிய மீனவர் பேரவைத் தலைவர் மா. இளங்கோ தெரிவித்தார்.

    இது குறித்து அவர் புதுவையில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது: இலங்கையில் நடைபெற்ற உலக மீனவர் பேரவை கூட்டத்தில் கலந்து கொண்டேன். அப்போது கடல் மற்றும் கடற்கரையை மீனவர்களிடம் இருந்து அபகரிப்பதை தடுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

    மேலும் இலங்கையில் உள்ள அரசு தரப்பினர் மற்றும் மீனவத் தலைவர்களிடம் இந்திய - இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து பேசினோம். 4-ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த தமிழக, புதுவை முதல்வர்கள் மற்றும் இந்திய அரசு, வெளியுறவுத்துறையால் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்தியா வந்த இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பேச்சுவார்த்தை விரைவில் நடக்கும் எனவும், அதில் சுமூக முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். தற்போது இந்திய மீனவர்களின் 115 படகுகள் இலங்கையிடம் உள்ளன. மழை காலம் தொடங்கினால் அந்த படகுகள் சேதமடையும். அவற்றின் மொத்த மதிப்பு ரூ. 70 கோடி ஆகும். எனவே பேச்சுவார்த்தைக்கு முன்பே படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இலங்கை சிறையில் உள்ள 5 மீனவர்களையும் விடுவிக்க வேண்டும்.

     கடல் மற்றும் கடற்கரை அபகரிப்புக்கு எதிராக உலக மீன்வளத் தினத்தில் (நவ. 21) தில்லியில் போராட்டம் நடத்தப்படும். 

    புதுவையில் கடந்த 4 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள மீனவர் ஓய்வூதியம் மற்றும் மீனவர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து சலுகைகளையும் நவம்பர் மாதத்தில் தருவதாக முதல்வர் நாராயணசாமி உறுதியளித்துள்ளார். ஜனவரி மாதத்தில் இருந்து வீடு தேடி பணம் வழங்கப்படும்.
    மீனவர்களுக்காக பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்தியுள்ளார். அவர் விரைவில் குணமடைந்து மீண்டும் மக்களுக்கும் மீனவர்களுக்கும் சிறப்பான சேவையை அளிக்க வாழ்த்துகிறேன் என்றார் அவர்.

    இந்த சந்திப்பின் போது மீனவர் பேரவையின் நிர்வாகிகள் காங்கேயம், புருஷோத்தமன், சிட்டிபாபு, பன்னீர், விவேகானந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai