Enable Javscript for better performance
சீனாவில் "கடல் அரிசி' உற்பத்தி செய்ய ஆராய்ச்சி!- Dinamani

சுடச்சுட

    

    பெய்ஜிங், 

    சீனாவில்  "கடல் அரிசி' என்னும் ஒரு வகை அரிசியை அதிக அளவில் உற்பத்தி செய்ய ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.

    இது தொடர்பாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனமான ஜின்ஹுவா தெரிவித்திருப்பதாவது: சீனாவில் "கலப்பின அரிசி வகைகளின் தந்தை' என்று அறியப்படும் விஞ்ஞானி யுவான் லாங்பிங் தலைமையில் புதிய "கடல் அரிசி' வகையை உருவாக்க ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.

    கடலில் நதிகள் சங்கமம் ஆகும் பகுதிகளில் இயற்கையாக கடல் அரிசி என்னும் அரிசி வகை தானாக வளர்கிறது. கடலோரப் பகுதியிலுள்ள உப்பு நீர் இதனை பாதிப்பதில்லை. உப்பு நீரிலேயே இது விளைகிறது. எந்த விதப் பூச்சித் தாக்குதல், நோய்த் தாக்குதலுக்கும் இந்த கடல் அரிசி ஆளாவதில்லை. மேலும் இதனை விளைவிக்க உரம் தேவையில்லை. இந்த வகை அரிசியை அதிக அளவில் உற்பத்தி செய்ய ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    யுவான் லாங்பிங் தலைமையிலான விஞ்ஞானிகளின் முயற்சியில் தற்போது 666 சதுர மீட்டர் பரப்பளவு நிலத்தில் 75 கிலோ கடல் அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது. இதனை 200 கிலோவாக அதிகரிக்கும் விதமாக ஆராய்ச்சி மேம்படுத்தப்படும்.

    ஜியோவோ வளைகுடா பகுதியையொட்டிய நிலப் பகுதியில் 2 ஹெக்டேர் பரப்பிலான நிலத்தில் புதிய வகை கடல் அரிசியை கடல் நீரைப் பயன்படுத்தி வேளாண் விஞ்ஞானிகள் உருவாக்க இருக்கிறார்கள். முதல் கட்டமாக இந்த ஆராய்ச்சிக்கு சுமார் ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பல்வேறு கட்டங்களில் இது ரூ. 2,000 கோடியாக அதிகரிக்கப்படும்.

     ஷான்டோங் மாகாணம், கிங்டாவோவில் அமைந்துள்ள ஆய்வு மையத்தில் கடல் அரிசி உற்பத்தி அதிகரிப்பு தொடர்பான ஆராய்ச்சி நடைபெறும். அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்த ஆராய்ச்சியின் பலன்களை எதிர்பார்க்கலாம் என்று வேளாண் விஞ்ஞானிகள் கருதுகின்றனர் என்று ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    சீனாவில் 65 சதவீத மக்களுக்கு அரிசி முக்கிய உணவாக உள்ளது. அதன் உற்பத்தியைத் தொடர்ந்து அதிகரிக்கச் செய்ய அந்நாட்டில் பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai