Enable Javscript for better performance
சேலம் உருக்காலை தனியார்மயமாக்கக் கூடாது பிரதமர் நரேந்திர மோடிக்குதிமுக தலைவர் கருணாநிதி கடிதம்- Dinamani

சுடச்சுட

    

    சேலம் உருக்காலை தனியார்மயமாக்கக் கூடாது பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம்

    By DIN  |   Published on : 15th October 2016 08:18 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Karunanidhi

    சென்னை,
    சேலம் உருக்காலையை தனியார்மயமாக்கக் கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.

    இதுகுறித்து, அவர் பிரதமருக்கு சனிக்கிழமை எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:-முதல்வராக முதல் முறையாக பதவியேற்றதும் கடந்த 1970 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி தில்லியில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையில் தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன்.

    இந்தக் கூட்டத்தில் பேசும் போது, சேலம் உருக்காலையை தமிழகத்தில் கொண்டு வர அதனை ஐந்தாண்டுத் திட்ட வரைவு அறிக்கையில் சேர்க்க வேண்டுமென வலியுறுத்தினேன். இல்லாவிட்டால் வரைவு திட்டத்துக்கு தமிழகம் ஒப்புதல் அளிக்காது எனவும் பேசினேன்.

    இதையடுத்து, தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று சேலம் உருக்காலைத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தும் என கடந்த 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அறிவித்தார். மேலும், இந்தத் திட்டத்தை நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தில் அவர் சேர்த்தார்.

    இவ்வாறு சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து சேலம் உருக்காலைத் திட்டத்துக்கான அடிக்கல்லை கடந்த 1970 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதி இந்திரா காந்தி நாட்டினார். சிறிய அளவில் பணிகளைத் தொடங்கிய சேலம் உருக்காலை நிறுவனம் பின்னாளில் மிகப்பெரிய அளவு வளர்ச்சி பெற்றது. இந்த நிறுவனமானது, 2 ஆயிரத்து 500 தொழிலாளர்களுக்கு நேரடியாகவும், 5 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு அளித்து வந்துள்ளது.

    இந்தச் சூழ்நிலையில், சேலம் உருக்காலை நிறுவனத்தை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை மத்திய பாஜக அரசு எடுத்துள்ளது. இந்த ஆலை தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து மிகவும் லாபகரமாகவே இயங்கி வருகிறது. இந்த ஆலையின் லாபம் ரூ.100 கோடியை எட்டியுள்ளது. ஆனால், உருக்காலை நஷ்டத்தைச் சந்தித்துக் கொண்டிருப்பதாகக் கூறி அதனை தனியார்மயமாக்க மத்திய அரசு முயற்சித்து வருவதாக எங்களுக்கு செய்திகள் வருகின்றன.

    இந்த உருக்காலையை தனியாருக்கு தாரை வார்ப்பதற்குப் பதிலாக அதனை நிர்வாக ரீதியான அனுபவம் கொண்ட நிபுணர்களைக் கொண்டு ஆலையை வலுப்படுத்த வேண்டும். அங்கு மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஆலையை உருவாக்குவதுடன், சேலத்தில் ரயில் பெட்டிகள் தயாரிப்பையும் தொடங்க வேண்டும்.

    சேலம் உருக்காலை மீது தமிழக மக்கள் உணர்வுப்பூர்வமான நிலையைக் கொண்டிருக்கிறார்கள். எனவே, அதனை தனியார் மயமாக்கினால் மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருக்கும். எனவே, சேலம் உருக்காலையை காப்பாற்றும் விஷயத்தில் தாங்கள் உடனடியாக தலையிட வேண்டும். அது தொடர்ந்து பொதுத்துறை நிறுவனமாகவே தொடர வேண்டும்.

    இந்த விஷயத்தில் தாங்கள் உடனடியாகத் தலையிட்டால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதுடன், தமிழகத்தின் மிகப்பெரிய பெருமைக்குரிய ஒரு நிறுவனம் காக்கப்படும் என தனது கடிதத்தில் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai