Enable Javscript for better performance
தமிழகத்தில் தண்ணீர் கிடைக்காத பகுதிகளை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்: திருநாவுக்கரசர்- Dinamani

சுடச்சுட

    

    தமிழகத்தில் தண்ணீர் கிடைக்காத பகுதிகளை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்: திருநாவுக்கரசர்

    By DIN  |   Published on : 15th October 2016 05:21 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்சி,

    தமிழகத்தில் தண்ணீர் கிடைக்காத மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்து, நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் சு.திருநாவுக்கரசர்.

    காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

    காவிரி நதிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. நான்கு வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை. காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தை ஏற்படுத்துவதன் மூலமே இரு மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்னைக்கு தீர்வு காண இயலும். இதை ஏற்க மறுக்கும் பாஜக தலைமையிலான மத்திய அரசின் போக்கை கண்டித்துதான் உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளோம். காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் எனவும் மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

    அடுத்தகட்டமாக அவசியம் ஏற்படின் போராட்டம் நடத்துவோம். மக்கள் பிரச்னைகளுக்கு உரிய நேரத்தில் தேவையான போராட்டத்தை காங்கிரஸ் நடத்தும்.

    தமிழகத்தில் தண்ணீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு மாவட்டங்களை மத்திய அரசு வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும். அந்த மாவட்ட விவசாயிகளுக்கு மத்திய அரசும், மாநில அரசும் நஷ்டஈடு வழங்க வேண்டும். 

    திமுக பொருளாளர் ஸ்டாலின் தலைமையில் அண்மையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில், அனைத்து விவசாய சங்கங்களுடன் காங்கிரஸ் கட்சியும் பங்கேற்றது. கூட்டத்தின் முடிவில், தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். பிரதமரை சந்தித்து காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்த வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தத் தீர்மானங்களை நிதியமைச்சர் பன்னீர்செல்வத்தை சந்தித்து, ஸ்டாலின் வலியுறுத்தினார். திமுகவின் மேற்கண்ட தீர்மானங்கள் மற்றும் கருத்துகளை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது.

    தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லையெனில் அனைத்து கட்சி, விவசாயிகள் சங்கங்களின் கூட்டத்தை கூட்டி தில்லி சென்று பிரதமரை சந்திப்போம் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதில் காங்கிரஸýம் பங்கேற்கும் என்றார் திருநாவுக்கரசர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai