Enable Javscript for better performance
தாய்லாந்தில் அரசப் பிரதிநிதி பொறுப்பேற்பு- Dinamani

சுடச்சுட

    

    பாங்காக், 

    தாய்லாந்து மன்னர் காலமானதைத் தொடர்ந்து, மன்னரின் கடமைகளைத் தொடர்ந்து நிறைவேற்ற அரசப் பிரதிநிதி (ரீஜன்ட்) பொறுப்பேற்றார்.

    தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்யதேஜ் வியாழக்கிழமை காலமானார். அவரையடுத்து அரியணையேற வேண்டிய இளவரசர், தந்தையை இழந்த துக்கத்திலிருந்து மீள கூடுதல் அவகாசம் வேண்டுமெனக் கூறியதால், பட்டம் சூட்டும் நாள் தீர்மானமாகவில்லை.  எனினும் அரசரின் கடமைகள் இடைவிடாமல் நிறைவேற்றப்பட வேண்டிய நிலையில், அந்நாட்டின் அரசியல் சாசனப்படி அரசப் பிரதிநிதி நியமிக்கப்பட்டுள்ளார்.

    தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் பிரேம் தின்சுலாநந்தா (96) அரசப் பிரதிநிதியாகப் பொறுப்பேற்றதாக துணைப் பிரதமர் விசானு கிரியங்கம் சனிக்கிழமை உறுதி செய்தார். அரசரின் உயர்நிலை ஆலோசனைக் குழுவான பிரிவி கவுன்சில் தலைவராக பிரேம் தின்சுலாநந்தா பதவி வகித்து வந்தார். அரசியல் சாசனப்படி, புதிய மன்னர் அரியணையேறும் வரை பிரிவி கவுன்சில் தலைவர் அரசரின் பிரதிநிதியாகச் செயல்படலாம். அரசருக்கு மகுடம் சூட்டப்படும்போது, அரசப் பிரதிநிதியின் பதவி முடிவுக்கு வரும்.

    தற்போது அரசப் பிரதிநிதியாகப் பொறுப்பேற்றுள்ள பிரேம் தின்சுலாநந்தா 1980 முதல் 8 ஆண்டுகள் தாய்லாந்து பிரதமராகப் பதவி வகித்தார். அதற்கு முன்னர் தாய்லாந்து ராணுவத் தலைமை தளபதியாகப் பதவி வகித்தார். 1988-இல் பிரிவி கவுன்சில் தலைவராக இருந்த தர்மசக்தி காலமானதைத் தொடர்ந்து அப்பதவியை பிரேம் தின்சுலாநந்தா ஏற்றார்.

    அப்போதிலிருந்து அந்தப் பதவியில் இருந்து வரும் அவர், தற்போது அரசப் பிரதிநிதியாகப் பொறுப்பேற்றுள்ளார். இளவரசர் மஹா வஜ்ரலாங்கரண் (64) மகுடம் சூட்டுவது எப்போது என்பது இன்னும் தீர்மானமாகவில்லை.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai