Enable Javscript for better performance
புதுப்பொலிவு பெறுகிறது ரயில் அருங்காட்சியகம்!- Dinamani

சுடச்சுட

    

    புது தில்லி, 

    தில்லியில் உள்ள ரயில் அருங்காட்சியகத்தில், "தி ரயில்ஸ்' எனும் பெயரில் மாலை நேர உணவகம், இரவு நேர மின்னொலி காட்சிகள் ஆகியவை புதிதாக தொடங்கப்பட உள்ளது.

    அருங்காட்சியகத்தை நோக்கி பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் ரயில்வே அமைச்சகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
    விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ள அந்த உணவகம், உலக பாரம்பரிய கட்டடமாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட மும்பை சத்திரபதி சிவாஜி ரயில் நிலையத்தின் மையப்பகுதி வடிவில் கட்டமைக்கப்படுகிறது. அந்த உணவகத்தை நிர்வகிக்கும் பொறுப்பு ஐஆர்சிடிசி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
    இதுகுறித்து, ஐஆர்சிடிசி தலைவரும், நிர்வாக இயக்குநருமான ஏ.கே.மனோசா கூறியதாவது:
    தலைநகரில் உள்ள அருங்காட்சியகத்தில் புதிதாக அமையவிருக்கும் உணவகத்தை நிர்வகிக்குமாறு ரயில்வே அமைச்சகம் எங்களை அறிவுறுத்தியுள்ளது. தனித் தனியே செயல்பட்ட ரயில் நிறுவனங்கள், பின்னர் ஒன்றாக்கப்பட்டு இந்திய ரயில்வே உருவாக்கப்பட்டதன் மாதிரி வடிவங்கள் இந்த உணவகத்தில் இடம்பெறும்.
    இங்கு, உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வகையிலான பிரத்யேக ரயில் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன், இரவு நேர ஒலி, ஒளியுடன் கூடிய நிகழ்ச்சி, சக்கரங்களுடன் கூடிய ரயில் பெட்டியில் பழங்கால உணவக அமைப்புகள் ஆகியவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
    பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு வசதிகளுடன் கூடிய, சொகுசு ரயில் ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இந்த வசதிகள் அனைத்தையும் ஐஆர்சிடிசி ஏற்படுத்தும்.
    பார்வையாளர்கள் வருகை தந்து இளைப்பாறி உணவருந்தும் வகையில் இந்த உணவகம் உருவாக்கப்படுவதன் மூலம், சுற்றுலாப் பயணிகளின் வாயிலாக ரயில்வே அமைச்சகத்துக்கு நிதி திரட்ட இயலும்.
    தற்போது வார நாள்களில் சுமார் 2,000 பார்வையாளர்களும், வார இறுதி நாள்களில் சுமார் 5,000 பார்வையாளர்களும் அருங்காட்சியகத்துக்கு வருவதாக அதிகாரி ஒருவர் கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai