நதிநீர் பிரச்னையில் மத்திய அரசு தொடர்ந்து துரோகம் செய்கிறது: தொல். திருமாவளவன் பேட்டி
By DIN | Published on : 05th September 2016 08:05 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

நதிநீர்ப் பிரச்னையில் மத்திய அரசு தமிழகத்துக்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் தொல். திருமாவளவன். அரியலூர் மாவட்டத்தில் அவர் திங்கள்கிழமை அளித்த பேட்டி:
அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் பழுப்பு நிலக்கரித் திட்டத்துக்காக விவசாய நிலங்களை தமிழக அரசு கையகப்படுத்தியது. ஆனால் 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் திட்டம் தொடங்கவும் இல்லை, விவசாயிகளுக்கான உரிய இழப்பீடும் வழங்கவில்லை.
இந்நிலையில் மேற்குவங்க மாநிலம் சிங்கூரில் டாடா நிறுவனத்தால் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு 10 ஆண்டுக்கு மேலாகியும் தொழில் தொடங்கப்படாததால் கையகப்படுத்திய நிலங்களை விவசாயிகளிடமே இழப்பீட்டு தொகையுடன் திருப்பி வழங்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதை அடிப்படையாகக் கொண்டு ஜயங்கொண்டம் பழுப்பு நிலக்கரித் திட்டத்திற்காக கையகப்படுத்திய நிலங்களையும் உரிய இழப்பீட்டுடன் திருப்பி வழங்க தமிழக அரசு நடவடிகை மேற்கொள்ள வேண்டும்.
அண்டை மாநிலங்களுடன் தமிழகம் சந்தித்து வரும் நதிநீர் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக அனைத்துக் கட்சிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்.
நதிநீர் பிரச்னையில் மத்திய அரசு தமிழகத்திற்கு தொடர்ந்து துரோகம் செய்கிறது. சட்டப்பேரவையில் எந்த பிரச்னையையும் விவாதிக்க அனுமதிக்கப்படுவதில்லை. 110 விதியின் கீழ் திட்டங்களை வெளியிடும் நடைமுறையைப் பின்பற்றி வருகிறார் தமிழக முதல்வர். இது ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைப்பதாகும். எதிர்க்கட்சிகளுக்கு இருக்கும் பொறுப்பைவிட ஆளும் கட்சிக்கு அதிக பொறுப்புண்டு. சட்டப்பேரவையில் ஆளும் கட்சியினர் எதிர்க் கட்சிகளை தனிபட்ட முறையில் விமர்சிப்பதை முக்கியக் கடமையாகக் கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு உள்ளிட்ட நதிநீர் பிரச்னைகளால் 20 கும் மேற்பட்ட மாவட்டங்கள் விவசாயத்திற்காக அண்டை மாநிலங்களை நம்பியிருக்க வேண்டியுள்ளது. இதனால் 10 ஆண்டுகளில் குடிநீருக்காக அலையக்கூடிய நிலை தமிழகத்திற்கு வருமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
எனவே தமிழக அரசு இந்தப் பிரச்னை குறித்து ஆழமாகச் சிந்தித்து, விவாதிக்க வேண்டும். விவசாயிகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்க அனைவரும் பயன்பெறும் வகையில் மானியத் திட்டங்களை வழங்க வேண்டும். இம்மாதத்தில் கட்சி சார்பில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்கும் நதிநீர் உரிமைப் பாதுகாப்பு மாநாடு நடைபெற உள்ளது என்றார் அவர்.