விஷால் வேட்புமனு நிராகரிப்பு: காரணம் தெரியுமா உங்களுக்கு..?

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலையொட்டி செவ்வாய்க்கிழமை நடந்த வேட்புமனுக்கள் பரிசீலனையில் அதிமுக, திமுக, தினகரன் உள்ளிட்ட முக்கிய
விஷால் வேட்புமனு நிராகரிப்பு: காரணம் தெரியுமா உங்களுக்கு..?

சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலையொட்டி செவ்வாய்க்கிழமை நடந்த வேட்புமனுக்கள் பரிசீலனையில் அதிமுக, திமுக, தினகரன் உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. நடிகர் விஷால், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா ஆகியோரின் வேட்பு மனு உள்பட 70 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 

ஆர்கே நகர் தேர்தலில் போட்டியிட நடிகர் விஷால் தாக்கல் செய்த வேட்பு மனு குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டதால் அதன் மீதான பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டது.  

இதையடுத்து விஷால் உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் முன்மொழிந்தவர்கள் அதிமுக வேட்பாளர் மதுசூதனனால் மிரட்டப்பட்டதாக ஒரு ஆடியோவையும் விஷால் வெளியிட்டார். இதனை தேர்தல் அதிகாரியிடமும் அவர் அளித்தார். அடுத்த 5வது நிமிடத்தில் வெளியே வந்த நடிகர் விஷால் தன்னுடைய வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது, தேர்தல் ஆணையம் நியாயமான தீர்ப்பு தந்துள்ளது என்றார். நாளை முதல் களத்தில் சந்திக்கலாம் என்று சொல்லிவிட்டு சென்றார். இதையே தன்னுடைய டுவிட்டர் பக்கத்திலும் விஷால் பதிவிட்டிருந்தார். இதற்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலும் வாழ்த்து தெரிவித்திருந்தார். 

ஆனால் விஷாலின் வேட்புமனுவை ஏற்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுக, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையினர் மறியலில் ஈடுபட்டனர். 

அவர் கொடுத்த ஆதாரங்களின் அடிப்படையில் வேட்பு மனு ஏற்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இதன் பின் மீண்டும் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அலுவலர் அறிவித்தார்.

பின்னர் மாலையில் மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்நிலையில், திடீர் திருப்பமாக இரவு 11 மணியளவில் தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், மாலையில் மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது விஷாலின் வேட்பு மனுவை முன்மொழிந்த 10 பேரில் இருவர் தாங்கள் கையெழுத்திடவில்லை என மறுத்ததாகவும், வங்கிக் கணக்கு விவரங்கள், தவறான குடியிருப்பு முகவரி உள்ளிட்ட காரணங்களால் மனு நிராகரிக்கப்படுவதாகவும் தேர்தல் நடத்தும் அதிகாரி கே.வேலுச்சாமி அறிவித்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள விஷால் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. மனு ஏற்கப்பட்டதாக அறிவித்து பின்னர் ஏன் நிராகரித்தார்கள் என தெரியவில்லை; சுயேட்சை வேட்பாளர் ஒருவரை ஆதரித்து வெற்றி பெற வைப்பேன் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com