பேரவையில் ஓ.பன்னீர்செல்வம் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

சட்டப்பேரவையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட வேண்டும்
பேரவையில் ஓ.பன்னீர்செல்வம் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

சட்டப்பேரவையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:-   முதல்வராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்று மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை அறிக்கை விடுத்துள்ளார். இது, முதல்வராக உள்ள ஓ.பன்னீர்செல்வத்தைச் சிறுமைப்படுத்தும் செயலாகும். 

மேலும், சசிகலாவுக்கு ஆதரவாக வெளியிட்டுள்ள அறிக்கை, அரசியல் சட்டத்தின் மாண்புகளையும், ஜனநாயகத்தையும் சீர்குலைக்கும் விதத்தில் அமைந்திருப்பது கண்டு அதிர்ச்சியடைகிறேன். 

ஜெயலலிதா மரணமடைந்தவுடன் இரவோடு இரவாக அதிமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரையும் தனியாக பேருந்துகளில் அழைத்துச் சென்று ஓ.பன்னீர் செல்வம் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். அதில் கூட, நடைமுறை சிக்கல்கள் பல இருந்தாலும், மாநிலத்தின் நலன் கருதி, மாநில நிர்வாகம் சீர்கெட்டு விடக்கூடாது என்ற ஒரே காரணத்தின் அடிப்படையில் பொறுப்புள்ள எதிர்கட்சியாக இருக்கும் திமுக, எவ்வித நெருக்கடியும் கொடுக்காமல் அமைதி காத்தது. 

தமிழக ஆளுநரும் அப்போது நிலவிய அசாதாரண சூழ்நிலையைக் கருதி, உடனடியாக அதிமுகவின் ஏற்பாட்டுக்குச் சம்மதம் தெரிவித்து, பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிலையில், தம்பிதுரை தனது மக்களவைத் துணைத் தலைவர் லெட்டர் பேடை பயன்படுத்தி இப்படியொரு அறிக்கை விட்டிருப்பது மிகவும் வெட்கக்கேடான செயலாகும்.

எனவே, ஆளுநர் உடனடியாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு உள்ள பலத்தை சட்டப்பேரவையில் நிரூபிக்க உத்தரவிட வேண்டும். 

அதே நேரத்தில், மக்களவைத் துணைத் தலைவர் பதவியைப் பயன்படுத்தி இது போன்ற காரியங்களில் ஈடுபடுவதை தம்பிதுரை தவிர்க்க வேண்டும்.

ஒருவேளை, கட்சி விசுவாசத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் இருந்தால் தன்னுடைய துணைத் தலைவர் பதவியை ராஜிநாமா செய்து விட்டு, எவ்வளவு அறிக்கைகள் வேண்டுமானாலும் கொடுக்கட்டும். அது அவரது கட்சிப் பணி. 

ஆனால், அரசியல் சட்டத்துக்கு எதிராகவும், அரசியல் சட்ட நெருக்கடியை ஏற்படுத்தவும் தனது துணைத் தலைவர் பதவியை பயன்படுத்த வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com