குழந்தைகள் நலக்குழு அதிரடி ஆய்வு: காப்பகம் மூடப்பட்டு குழந்தைகள் மீட்பு

புதுச்சேரி மாநில குழந்தைகள் நலக்குழு மேற்கொண்ட அதிரடி ஆய்வில் ஒதியம்பட்டில் உள்ள குழந்தைகள் காப்பகம் மூடப்பட்டு, அங்கிருந்த 37 குழந்தைகள் மீட்கப்பட்டனர்.
Published on
Updated on
1 min read

புதுச்சேரி மாநில குழந்தைகள் நலக்குழு மேற்கொண்ட அதிரடி ஆய்வில் ஒதியம்பட்டில் உள்ள குழந்தைகள் காப்பகம் மூடப்பட்டு, அங்கிருந்த 37 குழந்தைகள் மீட்கப்பட்டனர்.
வில்லியனூர் அடுத்த ஒதியம்பட்டில் பன்சாரா ஜிப்சி ஹோம் என்ற தனியார் காப்பகம் இயங்கி வந்தது. இதில் மொத்தம் 37 குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் அங்கு பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் அளித்த தகவலின் பேரில் குழந்தைகள் நலக்குழுத் தலைவர் டாக்டர் வித்யா ராம்குமார் தலைமையில் நேற்று காப்பகத்தில் அதிரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது அங்கிருந்த 37 குழந்தைகள், ஊழியர்களிடம் நலக்குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். அக்காப்பகம் உரிய கட்டமைப்பு வசதி இல்லாமல் ஒதுக்குப்புறமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அக்கட்டடம் வெளிநாட்டினர் வந்து தங்கிச் செல்லும் இடமாக உள்ளது. இதன் ஒரு பகுதியில் காப்பகம் நடத்தப்பட்டு வந்துள்ளது.
வெளிநாட்டினரை மகிழ்விக்க பெரிய பெண் குழந்தைகளை நடனமாடும்படி நிர்ப்பந்தம் செய்ததும் விசாரணையில் தெரிந்தது. மேலும் காப்பகத்தில் உள்ள கழிப்பறைகளை பயன்படுத்த குழந்தைகளை அனுமதிக்காததால் திறந்தவெளிக்கு செல்ல வேண்டிய அவல் நிலை இருந்தது.
குழந்தைகளுக்கு உரிய உணவும் தரப்படவில்லை. நன்கொடை அளிப்போர் தரும் உணவையும் முறையாக வழங்கவில்லை. வார இறுதி நாள்களில் அருகே உள்ள பகுதிகளில் விறகு சேகரிக்க அனுப்பி வந்ததுள்ளனர். இதனால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் கடிக்கும் ஆளாகும் அபாயம் உள்ளது.
காப்பகத்தைச் சேர்ந்த குழந்தைகள் பயிலும் பள்ளி தொலைதூரத்தில் இருந்ததால் நடந்தே செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். காப்பகத்தின் காவலரும் குடிபோதையில் இருந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
சில ஊழியர்களால் குழந்தைகள் மன உளைச்சல், பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாகி உள்ளனர்.
குழந்தைகள் பராமரிக்க விதிப்படி இருக்க வேண்டி பெண் ஆலோசகர், பணியாளர் எவரும் இல்லை. காப்பகம் விதிப்படி உரிமம் பெற்றிருக்கவில்லை என்பதும் 11 வழிமுறைகளை கடைபிடிக்கவில்லை என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து காப்பகத்தை மூடி, குழந்தைகளை வேறு இடத்துக்கு மாற்ற குழந்தைகள் நலக்குழு பரிந்துரை செய்தது.
அதன்பேரில் சமூகநலத்துறை குழந்தைகளை மீட்டு நல்ல நிலையில் பராமரிக்கப்படும் வேறு காப்பகத்தக்கு மாற்ற நடவடிக்கை எடுத்தது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் புதுச்சேரியில் உளள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட காப்பகங்களையும் நலக்குழு ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com