தமிழகத்தின் புதிய ஆளுநராக பொறுப்பேற்றார் பன்வாரிலால் புரோஹித்
By DIN | Published On : 06th October 2017 09:55 AM | Last Updated : 06th October 2017 10:52 AM | அ+அ அ- |

சென்னை: தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பொறுப்பேற்றார்.
கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று வெள்ளிக்கிழமை காலை பதவிப் பிரமாண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கலந்துகொண்டு ஆளுநருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
ஆளுநராக பொறுப்பேற்றுக்கொண்ட பன்வாரிலால் புரோஹித்துக்கு பொன்னாடை போர்த்தி, பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார் முதல்வர் பழனிசாமி. தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் சட்டப்பேரவை சபாநாயகர் தனபால், துணைமுதல்வர் பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், காவல்துறை அதிகாரிகள், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழகத்தின் ஆளுநராக பதவி ஏற்றுள்ள பன்வாரிலால் புரோஹித் (77) மகாராஷ்டிர மாநிலம் விதர்பா பகுதியை சேர்ந்தவர். பேரவை உறுப்பினர், மக்களவை உறுப்பினர், அமைச்சர் போன்ற முக்கிய பதவிகளில் இருந்துள்ளார். தற்போது ‘தி ஹிதாவதா’ என்ற நாளிதழின் உரிமையாளராகவும், நிர்வாக ஆசிரியராகவும், நாக்பூரில் பொறியியல் கல்லூரி ஒன்றின் தலைவராகவும் இருந்து வருகிறார்.
நாடு சுதந்திரம் அடைந்தபோது தமிழக ஆளுநராக லெப்டினெட் ஜெனரல் சர் ஆர்சிப்பால் எட்வர்ட் நை இருந்தார். அதன் பின்னர் ஆளுநர், பொறுப்பு ஆளுநர் என்று 28 பேர் தமிழக ஆளுநர்களாக இருந்துள்ளனர். தற்போது தமிழகத்தின் 29-வது ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பதவியேற்றுள்ளார். ஆளுநருடன் அவரது மனைவியும் விழாவில் பங்கேற்றார்.