சென்னை: முன்னாள் முதல்வரும், திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரீனா கடற்கரையில் அடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி தர மறுத்ததை எதிர்த்து திமுக தொண்டர்கள் போராட்டத்தில் குதித்துள்ளதால் தமிழகம் முழுவதும் பரபரப்பு நிலவி உள்ளது.
காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் காலமானார். இதனை அடுத்து, ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல தலைவர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கருணாநிதியின் உடல் இன்று இரவில் சிஐடி காலனியில் உள்ள இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து ராஜாஜி மண்டபத்துக்கு நள்ளிரவில் கொண்டு செல்லப்படுகிறது. நாளை முக்கிய பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலிக்கு பின்னர் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
கருணாநிதி உடலை மெரீனா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய திமுக திட்டமிட்டது. இதுதொடர்பாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அவரது குடும்பத்தினர், கட்சியினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து முறைப்படி மனு அளித்து அனுமதி கோரியுள்ளதாகவும், முதல்வர் பரிசீலனை செய்வதாக கூறியுள்ளதாகவும் துரைமுருகன் தெரிவித்தார்.
இந்நிலையில், கருணாநிதிக்கு மெரீனாவில் நினைவிடம் ஒதுக்குவதில் பல சட்ட சிக்கல்கள் உள்ளதால், சென்னை காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்க அரசு தயாராக இருப்பதாக தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார். இதனால் திமுகவினர் கடும் அதிருப்தியும், கோபமும் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், காவேரி மருத்துவமனை முன்பு திரண்டுள்ள திமுகவினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். கருணாநிதிக்கு மெரீனாவில் இடம் தர வேண்டும். அதுவரை போராட்டம் நடத்தப்படும் என்று அவர்கள் அறிவித்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.