சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதை அடுத்து கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு என காவேரி மருத்துவமனையின் அறிக்கையை தொடர்ந்து அவருக்கு 11ஆவது நாளாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கருணாநிதியின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. முதுமை தொடர்புடைய பாதிப்புகள் காரணமாக, அவரது முக்கிய உடலுறுப்புகளின் செயல்பாட்டை மருத்துவ ரீதியாகச் சமாளிப்பது சவாலாக உள்ளது. கருணாநிதிக்கு தொடர் கண்காணிப்பும் மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவ சிகிச்சைகளை அவரது உடல் ஏற்றுக்கொள்கிறதா என்பது 24 மணி நேரத்துக்குப் பிறகே தெரிய வரும் என்று காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் நேற்று மாலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து காவேரி மருத்துவமனை முன் நேற்று மாலை முதல் முக்கிய தலைவர்கள், தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில், கருணாநிதி உடல் நலம் குறித்து கேட்டறிய பல்வேறு பகுதிகளில் இருந்து மூத்த நிர்வாகிகளும், தொண்டர்கள் தங்களது குடும்பத்துடன் காவேரி மருத்துவமனை அமைந்துள்ள பகுதியை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தொண்டர்கள் கூட்டம் அதிகரித்து வருவதை அடுத்து காவேரி மருத்துவமனையை சுற்றிலும் கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
காவேரி மருத்துவமனை பகுதியில் 2 துணை ஆணையர்கள், 4 உதவி ஆணையர்கள் தலைமையில் 200 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
இந்நிலையில், மருத்துவமனைக்கு வருகைத்தந்துள்ள மூத்த நிர்வாகிகளுடனும் காவேரி மருத்துவமனை வளாகத்தில் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் திமுக தலைமை நிலைய மேலாளர்கள் ஜெயக்குமார், பத்மநாபன் ஆகியோரும் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்தனர். அவர்களும் திமுக மூத்த நிர்வாகிகளுடன் கருணாநிதி உடல்நிலை கவலைக்கிடமாகி உள்ள நிலையில் அடுத்ததாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
இதனிடையே மாலை 6 மணிக்கு பிறகு காவேரி மருத்துவமனையில் இருந்து கருணாநிதி உடல் நிலை குறித்த முக்கிய செய்திகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிய ஏற்பாடுகள் செய்வது குறித்தே திமுக தலைமை நிலைய மேலாளர்கள் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசித்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.