அரசியல் இமயம் சரிந்தது, ஓய்வறியா உதய சூரியன் ஓய்வெடுக்கச் சென்றது. தமிழன்னை தன் தலைமகனை முத்தமிழ் அறிஞரை செம்மொழிக் காவலரை இழந்து கண்ணீர் சிந்துகிறாள். உலகெங்கும் வாழுகிற தமிழர்களின் உள்ளங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருந்த தமிழர்களின் காவலர் காலனின் பசிக்கு இறையானார். கோடானகோடி தமிழ் மக்களின் இதயங்களில் நெருப்பள்ளிக் கொட்டியது போல்; உலகெங்கும் வாழுகிற தமிழர்கள் துயரில் துடிக்கின்றனர்.
ஐம்பதாண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர். ஐந்து முறை தமிழகத்தை ஆண்ட மன்னன். பதிமூன்று முறை சட்டமன்ற தேர்தல்களில் தோல்வியே காணாத வெற்றித் திருமகன். மாணவப் பருவம் தொட்டு 80 ஆண்டு பொது வாழ்விற்கு சொந்தக்காரர். ஆளுங்கட்சி தலைவராய், எதிர்கட்சித் தலைவராய் 60 ஆண்டுகள் திகழ்ந்த கலைரைச் சுற்றியே தமிழக அரசியல் வலம் வந்தது.
80 ஆண்டு கலைஞரின் வரலாறே தமிழகத்தின் வரலாறாய் அமைந்தது. இப்படி சாதனைகள் பல புரிந்த சாதனை வேந்தர் டாக்டர் கலைஞர் மறைந்தார். சிறுகதை, கதை, திரைக்கதை, வசனம், நாவல், கட்டுரை, கடிதங்கள், கவிதை, நாடகம், பேச்சு, பட்டிமன்றம், கவியரங்கம் என தோன்றிய துறைதோறும் புகழ்கொடி நாட்டியவர் கலைஞர். எழுத்தாற்றல், பேச்சாற்றல், நகைச்சுவை உணர்வு, சமயோசித அறிவு, நுண்ணறிவு, நிர்வாகத்திறமை, என அனைத்திலும் முத்திரை பதித்தவர் கலைஞர்.
சமூக நீதிக் காவலராய், ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் சிறுபான்மை மக்களைப் பாதுகாக்கும் கேடயமாய் திகழ்ந்தவர்;. சுயமரியாதை திருமணங்களை சட்டப்பூர்வமாக்கி, பெண்களுக்கு சம உரிமை நல்கி சொத்தில் சம பங்கு தந்து, சமத்துவபுரம் அமைத்து, அனைவரும் அர்ச்சகராக சட்டம் தந்து, மாநில உரிமைகளுக்கு குரல் கொடுத்து, இந்திய தேசிய கொடியை முதல்வர்கள் பறக்கவிட வழி செய்து, சமூக நலத்திட்டங்களால் அனைவர் வாழ்விலும் ஒளியேற்றியவர். குறளோவியம், சங்கத்தமிழ், தொல்காப்பியப் பூங்கா, ரோமாபுரி பாண்டியன், பொன்னர் சங்கர் போன்ற நூற்றுக்கணக்கான இலக்கிய அணிகலன்களை தமிழன்னைக்கு பூட்டி மகிழ்ந்தவர்.
தந்தை பெரியாரின் மாணவராய், அறிஞர் அண்ணாவின் தம்பியாய் அரசியல் வாழ்க்கை தொடங்கி, பண்டித ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி அம்மையார், ராஜீவ் காந்தி, ராஜாஜி, காமராஜர், அன்னை சோனியாகாந்தி, தலைவர் திரு ராகுல் காந்தி அவர்கள் உள்ளிட்ட பல தலைமுறைத் தலைவர்களோடு நட்பும், தொடர்பும் கொண்டு அவர்களின் அபிமானத்தை பெற்ற இந்திய திருநாட்டின் மூத்த தலைவராய், தமிழ் மண் தந்த பொக்கிஷமாய், தமிழகத்தின் வாராது வந்த மாமணியாய், வாழ்ந்து மறைந்துள்ள கலைஞரைப் போல் இன்னொரு கலைஞர் தோன்ற எத்தனை யுகங்கள் தமிழ் மக்கள் காத்திருக்க வேண்டுமோ? யார் அறிவார்?
கடந்த 50 ஆண்டுகளாய் என் உள்ளம் கவர்ந்தவராய், இதயம் நிறைந்தவராய், என் திருமணம் தொடங்கி, என் பிள்ளைகள் திருமணத்தை நடத்தி வைத்த குடும்பத் தலைவராய் துணிவும் கனிவும் நிறைந்த அண்ணனாய், அன்பு பாராட்டிய அன்புத் தலைவர் கலைஞரின் காலடியில் என் கண்ணீரை காணிக்கையாக்குகிறேன். தமிழ்நாடும், தமிழினமும், தமிழ் மொழியும் உள்ளவரை அண்ணன் கலைஞரே, உங்கள் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்.
அண்ணன் கலைஞரின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை என் சார்பிலும், தமிழ்நாடு காங்கிரஸ் சார்பிலும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை மிக்க துயரோடு தெரிவித்துக் கொள்கிறேன்.