சென்னை: சென்னை காமராஜர் சாலையில், அண்ணா நினைவிடம் இருக்கும் வளாகத்துக்குள், திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்வதற்கு இடம் ஒதுக்கக்கோரி காவேரி மருத்துவமனை முன்பு திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் லேசான தடியடி நடத்தினர். இதனால் பதற்றம் நிலவி வருகிறது.
சென்னை மெரீனாவில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய இடம் ஒதுக்க தமிழக அரசு மறுத்துவிட்டது. இதனைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், சென்னை காமராஜர் சாலையில், அண்ணா நினைவிடம் இருக்கும் வளாகத்துக்குள், திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்வதற்கு இடம் ஒதுக்கக்கோரி காவேரி மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் தள்ளுமுள்ளில் ஈடுபட்டனர்.
மருத்துவமனை முன்பு காவல்துறையினர் அமைத்திருந்த தடுப்புகளை உடைத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து லேசான தடியடி நடத்தி போலீஸார் அவர்களை விரட்டி கலைத்தனர்.
அண்ணா நினைவிடம் அருகே கருணாநிதிக்கு இடம் ஒதுக்க வேண்டும் என திமுகவினர் தொடர்ந்து கோஷமிட்டு வருகின்றனர். இதனால் மருத்துவமனை முன்பு பதற்றம் நிலவி வருகிறது.