சென்னை: சென்னை காமராஜர் சாலையில், அண்ணா நினைவிடம் இருக்கும் வளாகத்துக்குள், திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்வதற்கு இடம் ஒதுக்கக்கோரி பல்வேறு கட்சித் தலைவர்கள் தமிழக அரசை வலியுறுத்தி உள்ளனர்.
திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு மூச்சுக்குழாய் மாற்றுவதற்காகக் கடந்த மாதம் 18-ஆம் தேதி ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனைக்குச் சென்றார். அதன்பின் கடந்த 28-ஆம் தேதி நள்ளிரவு ரத்த அழுத்தக் குறைபாட்டால், காவேரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டார்.
அதன்பின் இன்றுடன் 11 நாட்களாக தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்று வந்தநிலையில் வயது மூப்பு மற்றும் உடல் உறுப்புகள் செயல்பாட்டுக் குறைவு காரணமாக இன்று மாலை 6.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனை அடுத்து, குடியரசுத்தலைவர், பிரதமர் உள்பட பல தலைவர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. வீர வணக்க முழக்கங்களுடன் தொண்டர்கள் கண்ணீர் அலையில் வாகனம் வந்து சேர்ந்தது.
கருணாநிதிக்கு மெரீனாவில் நினைவிடம் ஒதுக்குவதில் பல சட்ட சிக்கல்கள் உள்ளதால், சென்னை காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்க அரசு தயாராக இருப்பதாக தலைமை செயலாளர் தெரிவித்துள்ள நிலையில், அண்ணா நினைவிடம் இருக்கும் வளாகத்துக்குள், திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்வதற்கு இடம் ஒதுக்கக்கோரி பல்வேறு கட்சித் தலைவர்கள் தமிழக அரசை வலியுறுத்தி உள்ளனர்.
இதுதொடர்பாக, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் முத்தரசன் மற்றும் பாலகிருஷ்ணன், மூத்த காங்கிரஸ் கட்சி தலைவர் குலாம்நபி ஆசாத் மற்றும் கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலர் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் பக்க பதிவில், திமுக தலைவர் கருணாநிதியை மெரீனாவில் அடக்கம் செய்ய தமிழக அரசு இடம் ஒதுக்க வேண்டும். அதுதான், நாம் அந்த மாமனிதருக்கு கொடுக்கும் தகுந்த மரியாதை என பதிவிட்டுள்ளார்.