சென்னை: சென்னை காமராஜர் சாலையில், அண்ணா நினைவிடம் இருக்கும் வளாகத்துக்குள், திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்வதற்கு இடம் ஒதுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதி ஹுலுவாடி ரமேஷை நேரில் சந்தித்து மனு அளித்த நிலையில், அந்த மனு மீதான விசாரணையை இரவு 10 மணிக்கு விசாரணை நடைபெறுகிறது.
கருணாநிதிக்கு மெரீனாவில் நினைவிடம் ஒதுக்குவதில் பல சட்ட சிக்கல்கள் உள்ளதால், சென்னை காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்க அரசு தயாராக இருப்பதாக தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார். இதனால் திமுகவினர் கடும் அதிருப்தியும், கோபமும் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தை அணுக திமுக திட்டமிட்டது. இதுகுறித்து தற்காலிக தலைமை நீதிபதி ஹுலுவாடி ரமேஷை நேரில் சந்தித்து மெரீனாவில் கருணாநிதிக்கு இடம் அளிக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்தனர். அவசர வழக்காக இதை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதன்படி மெரீனாவில் அண்ணா நினைவிடம் இருக்கும் வளாகத்துக்குள், கருணாநிதிக்கு இடம் கோரி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) ரமேஷ் குலுவாடி முன்பு மனு தாக்கல் செய்தனர்.
இதையடுத்து அந்த வழக்கு இன்று இரவு 10.30 மணிக்கு விசாரிக்க ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.