‘வாட்ஸ்-அப்’பில் மாணவிகளை உயர் அதிகாரிகளுடன் பாலியல் தொழிலுக்கு அழைத்த கல்லூரி பேராசிரியை பணியிடை நீக்கம்

‘வாட்ஸ்-அப்’பில் மாணவிகளை உயர் அதிகாரிகளுடன் பாலியல் தொழிலுக்கு அழைத்த கல்லூரி பேராசிரியை பணியிடை நீக்கம்
‘வாட்ஸ்-அப்’பில் மாணவிகளை உயர் அதிகாரிகளுடன் பாலியல் தொழிலுக்கு அழைத்த கல்லூரி பேராசிரியை பணியிடை நீக்கம்

விருதுநகர்: ‘வாட்ஸ்-அப்’பில் மாணவிகளை உயர் அதிகாரிகளுடன் பாலியல் தொழிலுக்கு அழைத்த கல்லூரி பேராசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

விருதுநகர் மாவட்டம் அருகே அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை ஒருவர், கல்லூரியில் படிக்கும் 4 மாணவிகளை, உயர் அதிகாரிகளுடன் பாலியல் தொழிலுக்கு அழைத்த ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் அந்த கல்லூரியில் படிக்கின்ற மற்ற மாணவிகளின் பெற்றோரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 

மதுரை காமராஜர் பல்கலை கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் தேவாங்கர் கலை அறிவியல் கல்லூரி. இந்த கல்லூரியில் அருப்புக்‍கோட்டை மட்டுமின்றி, சுற்றுவட்டார கிராமப்புற மாணவ, மாணவிகள் என ஆயிரக்‍கணக்‍கானோர் பயின்று வருகின்றனர். இங்கு கணிதத்துறை பேராசிரியையாக பணிபுரிந்து வருபவர் நிர்மலா. இவர் தேர்வுத்தாள் திருத்தும் பணிக்காக காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு சென்று வருவது வழக்கம். அப்படி சென்ற போது, அங்குள்ள உயர் பொறுப்பில் உள்ளவர்கள் கல்லூரி மாணவிகளை பாலியலுக்கு அழைத்து வந்தால் 85 சதவீதத்திற்கு அதிகமான மதிப்பெண்களுடன், பணமும் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளதாக கூறி, தனது துறையில் பயிலும் ஏழை மாணவிகள் 4 பேரும் ஒன்றாக இருப்பதை உறுதி செய்துகொண்டு பேசும் அந்த பேராசிரியை, தான் சொல்லவரும் தகவல் ரகசியமாக இருக்கவேண்டியது முக்கியம் என கூறியுள்ளார். 

தற்போதுதான் பல்கலைக் கழகத்தில் இருந்து வந்தேன். உயர் அதிகாரிகள் கல்லூரி மாணவிகளை சில விஷயங்களுக்காக எதிர்பார்க்கிறார்கள். பல்கலைக்கழகத்தில் என்னென்ன செய்யமுடியுமோ அதையெல்லாம் பண்ண முடியும். உங்கள் பெயர்கள் பட்டியலில் இடம்பெற நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் ரெகுலர் கிளாஸ் கலந்துகொள்ள வேண்டாம். டி.என்.பி.எஸ்.சி. தேர்வாக இருந்தால்கூட சரிதான். எல்லாவற்றுக்கும் ஒரு அட்ஜெஸ்ட்மெண்ட் தேவைப்படுகிறது. நீங்கள் ஓசூருக்கு வந்துவிடுங்கள்.

என்னைப்போல 400 பேர் இருக்கிறார்கள். உங்களுக்கு டிகிரி வாங்கிக்கொடுப்பதில் நான் கவனமாக இருக்கிறேன். நீங்கள் ஒத்துழைக்காவிட்டால் தண்டனை கொடுக்கமாட்டேன். உங்களை கைதூக்கிவிடவே அழைக்கிறேன். இந்தக்காலத்தில் இப்போது நான் பேசும் விஷயம் ரொம்ப சாதாரணம் என்பது உங்களுக்கும் தெரியும், உலகத்துக்கும் தெரியும். எனக்கும் தெரியும். இதை பாசிட்டிவாக எடுத்துக்கொள்ளுங்கள் என தொடர்ந்து 20 நிமிடங்களுக்கு மேலாக மிகவும் எச்சரிக்கையாகவும் தந்திரமாகவும் பேசுகிறார்.

இதற்கு மாணவிகள், தங்களுக்கு விருப்பமில்லை என்றும், இதுகுறித்து இனி பேசவேண்டாம் என்று மறுக்கின்றனர். இருப்பினும், அவசரப்பட்டு முடிவு எடுக்காதீர்கள். உங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது, பொறுமையாக யோசித்து கூறுங்கள் எனவும் அவர்களைத் தொடர்ந்து மிகவும் நேர்த்தியாக கட்டாயப்படுத்தும் விதத்தில் பேராசிரியை நிர்மலா பேசுகிறார். 

இந்த வாட்ஸ்-அப் ஆடியோ பதிவை மாணவிகள் சமூக ஊடகங்களில் வெளியிட்டு அம்பலப்படுத்தி உள்ளனர் மாணவிகள். அந்த ஆடியோ உரையாடல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, கல்லூரி நிர்வாகம் பேராசிரியை நிர்மலாவை 15 நாள் பணியிடை நீக்கம் செய்துள்ளது.

மாணவிகளிடம் பேசியதை ஒப்புக்கொண்டுள்ள நிர்மலா, தான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டதாக விளக்கம் அளித்துள்ளார். எனினும், இந்த சம்பவம் அந்த கல்லூரியில் படிக்கின்ற மற்ற மாணவிகளின் பெற்றோரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மாணாக்கர்களுக்கு, நல்வழிகாட்டும் புனிதமான ஆசிரியர் தொழிலை மேற்கொண்டுள்ள பேராசிரியை, பெண் புரோக்கர் போல் செயல்பட்ட நிலையில் அவருக்கு பின்புலத்தில் இருக்கும் அந்த மதுரை பல்கலைக்கழகத்தின் உயர் அதிகாரிகள் யார் என்பது குறித்து அவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பயிருக்கு பாதுகாப்பாய் இருக்க வேண்டிய, வேலியே பயிரை மேயச்சொன்ன இந்த விபரீத சம்பவம் குறித்து உயர்கல்வித்துறை விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com